பெண்களுக்கான போராட்டங்களில் முதல் வரிசை முகம், உ.வாசுகி. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) அரசியல் தலைமைக்குழு உறுப்பினராக இருந்த ஆர். உமாநாத், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் முன்னோடித் தலைவர்களில் ஒருவரான பாப்பா உமாநாத்தின் மகள். அச்சங்கத்தில் தானும் தொண்டராக இணைந்தார், உ.வாசுகி. பத்தாண்டுகள் அதன் பொதுச்செயலாளர், தற்போது துணைத் தலைவர்களில் ஒருவர், சி.பி.எம் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர், மாநில செயற்குழு உறுப்பினர் எனப் பொறுப்புகளுக்கும், போராட்டங்களுக்கும் தன்னை ஒப்புக்கொடுத்தார். இந்திய அளவில் ஒரு கோடி உறுப்பினர்களும், தமிழகத்தில் 7 லட்சம் உறுப்பினர்களும் கொண்டது மாதர் சங்கம். அதன் மீடியா விமர்சனக் குழுவின் அமைப்பாளரான இவர், திரைப்படங்களில், விளம்பரங்களில், பாட புத்தகங்களில் பெண்களின் மலிவான சித்திரிப்பை எதிர்த்து, சமூகத்தின் கவனத்தில் புகுத்திய முன்னோடி. தனித்து வாழும் சிங்கிள் பெண்களுக்காகக் களம்கண்ட கலங்கரை. பெண் முன்னேற்றம் சார்ந்து பல புத்தகங்களை எழுதிய இவர், மாதர் சங்க இதழான ’மகளிர் சிந்தனை’யின் ஆசிரியர். காவல்துறையினர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சிதம்பரம் பத்மினி வழக்கு, பிரேமானந்தா சாமியாரின் வன்கொடுமை வழக்கு உள்ளிட்ட ஏராளமான வழக்குகளில் முன்நின்று, தமிழகம் முழுக்க அளந்துள்ளன இவரது போராட்ட பாதங்கள். மத்திய, மாநில அரசாங்களின் மக்கள் விரோத நடவடிக்கைகள் மற்றும் கொள்கைகளை எதிர்க்கும் இவரது உக்கிரம், குறையாமல் கனன்றுகொண்டே இருக்கிறது கால் நூற்றாண்டாக.
சமூக, அரசியல் போராட்டங்களில் சமரசமின்றி இயங்கும் இந்தப் போர்வாளுக்கு, தமிழன்னை விருது வழங்கித் தலைவணங்குகிறது அவள் விகடன்