பிளாக் அண்ட் வொயிட் காலம் முதல் ஓ.டி.டி யுகம் வரை திரைத்துறையில் தலைமுறைகளாகக் கோலோச்சிவரும் ஆளுமை... லட்சுமி. 16 வயதில் 'ஜீவனாம்சம்' திரைப்படத்தில் அறிமுகமானவர், நடிப்பு, நடனம், வசன உச்சரிப்பு எனத் தன்னைச் செதுக்கிக்கொண்டார். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், என்.டி.ராம ராவ், நாகேஸ்வர ராவ், பிரேம் நசீர், ராஜ்குமார், ரஜினிகாந்த், கமல்ஹாசன் என ஐந்து மொழிகளின் சூப்பர் ஸ்டார்களுடனும் நடித்த சூப்பர் ஹீரோயின் இவர். 1970-ல், 'சில நேரங்களில் சில மனிதர்கள்' திரைப்படத்தில் இவர் நடித்த 'கங்கா' கதாபாத்திரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதுடன் அவருக்கு தேசிய விருதையும் பெற்றுத் தந்தது. 'சம்சாரம் அது மின்சாரம்' என்றதுமே நம் மனதில் தோன்றும் முகம்... லட்சுமி. 'ருத்ரா' படத்தின் துணிச்சலான காவல்துறை அதிகாரி முதல் 'ஜீன்ஸ்' படத்தின் பியூட்டி பாட்டி வரை... அக்கதாப்பாத்திரங்களாகவே நம் மனதில் குடிகொள்ளும் திறமையாளர். நடிகர் படையே இருந்தாலும் தன் ரோலில் சிக்ஸர் அடித்துவிடும் நடிப்பு ராட்சசி. 'மழலைப் பட்டாளம்' திரைப்படத்தில் இயக்குநராகவும் தன்னை வெளிப்படுத்தினார். சமீபத்திய ‘ஸ்வீட் காரம் காபி’ வெப் சீரிஸில் இந்த சுந்தரி பாட்டி... ’எ லயன் இஸ் எ லயன்’ என்று ரசிக்கவைத்தார். 400-க்கும் அதிகமான படங்கள், பல மாநில அரசுகளின் சிறந்த நடிகைக்கான விருதுகள் பார்த்த மகுடம்.
55 ஆண்டுகளுக்கும் மேலாகக் கலைக்காதல் தீராமல் இயங்கிக்கொண்டிருக்கும் இந்த நடிப்புப் பல்கலைக்கழகத்துக்கு 'கலைநாயகி' விருது வழங்கிப் பெருமிதம் கொள்கிறது அவள் விகடன்.