சுடுகாடு... பெண்கள் கால் வைக்கக்கூடாத இடமாகவே இன்றும் பார்க்கப்படுகிறது. ஆனால், அதே சுடுகாட்டை தனக்கான புகலிடமாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டவர் ஜெயந்தி. ஆம்... மின் மயானத்தின் சிதையூட்டும் பணியாளர். நாமக்கல் மாவட்ட பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த எம்.ஏ பட்டதாரி. உயிருக்குயிரான தந்தையின் திடீர் மரணம் ஜெயந்தியின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டது. மாநகராட்சியின் மின் மயானத்தில் தோட்டப் பணியாளராகச் சேர்ந்தவருக்கு, சிதையூட்டும் வேலை கிடைத்தது. அதனை சேவைப் பணியாக விரும்பி ஏற்றார். எல்லா திசைகளிலும் எதிர்ப்புகள் கிளம்பினாலும் பின்வாங்கவில்லை. கடந்த 12 ஆண்டுகளில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உடல்களைச் சிதையூட்டியிருக்கிறார். ஆம்புலன்ஸ் டிரைவரான கணவரும், கல்லூரியில் படிக்கும் இரண்டு மகன்களும் ஜெயந்தியின் தூண்கள். குறைந்த சம்பளத்தில் குடும்பத்தை கரை சேர்த்தவர் தற்போது சேந்தமங்கலம் பேரூராட்சி மின் மயானத்தில் பணியாற்றுகிறார். பேய், தீட்டு உள்ளிட்ட மூடநம்பிக்கைகளைப் புறக்கையால் தள்ளி, உடல்களின் சாம்பலை உறவுகளிடம் ஒப்படைப்பதுவரை தனியாளாகச் செய்து முடிக்கிறார். தன் அம்மா இறந்தபோது, அவருக்கான இறுதிக்காரியங்களைச் செய்வது தன் உரிமை என்று நிலைநாட்டினார். 500-க்கும் மேற்பட்ட பெண்கள், தங்களின் உறவுகளுக்கு இறுதிக்காரியங்கள் செய்ய உறுதுணையாகவும் நின்றிருக்கிறார்.
ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க எனக் கனிவுடனும் துணிவுடனும் வழியனுப்பிவைக்கும் ஜெயந்திக்கு 'சேவை தேவதை' விருது வழங்கி வாரிக்கொள்கிறது அவள் விகடன்!