இருளர் மக்கள் அதிகம் வசிக்கும் கடலூர் மாவட்டம், கிள்ளை எம்.ஜி. ஆர் நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 2012-ம் ஆண்டு ஆசிரியராகச் சேர்ந்தார் சசிகலா. அம்மாணவர்களுக்காகத் தன் நகைகளை விற்று நாற்காலிகள், மேசைகள் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறையை ஏற்பாடு செய்து கொடுத்து, அந்தச் சின்னக் கண்களை மின்னவைத்தார். பின்தங்கிய சமூகக் குழந்தைகளுக்குத் தன் வீட்டில் மாலையில் பயிற்சி வகுப்புகள் எடுக்கத் தொடங்கினார். அப்பகுதி மக்களும் அதில் இணைந்து எழுதப், படிக்கக் கற்றது ஓர் அமைதிப் புரட்சி. கொரோனாவுக்குப் பின் மடுவங்கரை கிராம அரசுப் பள்ளிக்குப் பணி மாறுதல் பெற்றவர், ஊராட்சி மன்றத் தலைவர் உதவியுடன் பொது இடத்தில் பயிற்சிப் பள்ளியை அமைத்தார். மாணவர்களுக்கு சமூகப் பார்வையும் கிடைக்க நூலகம் ஒன்றையும் தொடங்கினார். தற்போது அதில் 2500-க்கும் மேற்பட்ட புத்தகங்களைச் சேர்த்துள்ளார். பயிற்சிப் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை 40-ஐ தாண்டியதால், தன் ஊதியத்திலிருந்து இரண்டு ஆசிரியர்களை நியமித்துள்ளார். தன் நண்பர்கள் உதவியுடனும், தன் சம்பளத்திலிருந்து மாதம் 15% தொகை அளித்தும் சுற்றுலா, விவசாயம் சார்ந்த வகுப்புகள் என மாணவர்கள் உலகில் மகிழ்ச்சி சேர்க்கிறார். கடந்த கல்வியாண்டில், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சுடிதார் அணிந்துவரலாம் என்ற அரசாணை வெளியிடப்பட்டதன் முதல் கழகம் பிறந்தது, இவர் பள்ளிக்குச் சுடிதார் அணிந்து சென்ற ஒரு நாளில்தான்.
அரசுப் பள்ளி மாணவர்களின் எதிர்காலத்துக்காகத் தன் நிகழ்காலத்தை அர்ப்பணித்திருக்கும் சசிகலாவுக்கு ’கல்வித் தாரகை’ விருது வழங்கி கைகுலுக்குகிறது அவள் விகடன்.