மகாபலிபுரத்தைச் சேர்ந்த மீனவக் குடும்பத்துக் குழந்தை, கமலி மூர்த்தி. கடலும் கடல் சார்ந்த வாழ்க்கையும் என்பதை, கடல் சார்ந்த வெற்றியும் என்று மாற்றியெழுதி, தேசிய சர்ஃபிங் போட்டியில் சாம்பியன் பட்டம் சூடியுள்ள குட்டி திமிங்கலம் இவர். கமலியின் அப்பா குடும்பத்தை தவிக்கவிட்டுப் பிரிந்துசெல்ல, அம்மாவின் அன்பில் வளர்ந்தார். சொப்பு வைத்து விளையாடும் 3 வயதில், அவரை ஸ்கேட்டிங் போர்டில் ஏற்றிப் பழக்கினார் அலைச்சறுக்கு வீரரான அவர் மாமா சந்தோஷ். ஸ்கேட்டிங், சர்ஃபிங் என இரண்டையும் கற்ற அந்தக் குழந்தைக்கு, இது விளையாட்டல்ல, தன் எதிர்காலம் என தனது 6 வயதிலேயே புரிந்தது ஆச்சர்யம். 9 வயதில் அவர் வெறுங்கால்களில் ஸ்கேட்டிங் செய்த புகைப்படத்தை, சர்வதேச ஸ்கேட்டிங் சாம்பியன் டோனி ஹாக் ஷேர் செய்ய, ஓவர் நைட்டில் உலக வைரலானார் கமலி. வெளிநாட்டு இயக்குநர் சாஷா ரெயின்போ அவரைப் பற்றி எடுத்த ஆவணப்படம், அட்லாண்டா திரைப்பட விழாவில் கொண்டாடப்பட்டது. கமலியுடன் அவரின் திறமையும் புகழும் சேர்ந்தே வளர, 12 வயதில் போட்டிகளில் பங்கேற்க ஆரம்பித்தார். சமீபத்தில் நடந்து முடிந்த கோவிலாங் கிளாசிக் 2024, தேசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப் போட்டியில் முடிசூட்டப்பட்டார். தற்போது பத்தாம் வகுப்புப் படிப்பவருக்கு, ஏஷியன் சர்ஃப் சாம்பியன்ஷிப்தான் அடுத்த இலக்கு.
ஓயாத அலைகள் போல தீராத தீரத்துடன் கடலாடி வரும் இந்த சமுத்திர குழந்தைக்கு, 'லிட்டில் சாம்பியன்' விருது அளித்து மகிழ்ச்சிகொள்கிறது அவள் விகடன்.