காட்சி ஊடகம் தோற்றத்துக்கானது என்று தன்னிடம் திணிக்கப்பட்ட தீர்ப்பை ஏற்க மறுத்து, அது திறமைக்கானது என்று நிரூபித்திருக்கும் இளம்பெண்... ஷர்மிராஜ். சமூக வலைதள இன்ஃப்ளூயன்ஸரான இவரின் களம்... தனி நடிப்பு மற்றும் நடன வீடியோக்கள். மகிழ்ச்சியின் எந்தச் சுவடும் இல்லாத பால்யத்தை கடந்தவர் ஷர்மி. பெற்றோர் இருவரும் விவாகரத்தாகிப் பிரிந்துவிட, தனித்துவிடப்பட்ட குழந்தையானார். நீதிமன்றம் ஏறி, தன் அப்பாவிடம் இவர் தன் படிப்புச் செலவுக்குப் பணம் பெற்ற கஷ்டங்கள்... விவரிக்க முடியாதவை. லேப் டெக்னீஷியன் படிப்பில் சேர்ந்த ஷர்மியால், பகுதி நேர வேலைபார்த்துக்கொண்டேதான் கல்விக் கட்டணங்களைச் சமாளிக்க முடிந்தது. வேலையில் சேர்ந்தாலும், அவரது கிரியேட்டிவ் மூளை மீடியா கனவை அவருக்குள் ஊன்றியது. ஆனால், தட்டிய கதவுகளில் எல்லாம் நிறம், தோற்றம் எனப் புறக்கணிப்புகளே ஷர்மிக்கான பதில்களாக இருந்தன. சளைக்காமல், சமூக வலைதளத்தை தன் மேடையாக்கியவர், காமெடி வீடியோக்களை மொபைலில் ஷுட் செய்து பதிவிடத் தொடங்கினார். அன்னப்பறவை போல பாசிட்டிவ் விமர்சனங்களை மட்டும் பற்றிக்கொண்டு, மனம் தளராமல் முயன்றார். நடனம் தன் பலம் என்று உணர்ந்தவர், தன் சம்பளத்தில் கரகம், சிலம்பம், ஒயில், வெஸ்டர்ன் எனக் கற்றார். அவற்றுடன், சமூக விழிப்புணர்வு வீடியோக்கள், தனி நடிப்பு என என்டர்டெயினராக உருவெடுத்தார். ஒரு கட்டத்தில், அவர் வீடியோக்கள் மில்லியன் வியூஸ் கிரீடம் தரித்தன.
தான் நிராகரிக்கப்பட்ட இடத்தில், நிராகரிக்கவே முடியாதபடி வளர்ந்து நிற்கும் ஷர்மிக்கு ’வைரல் ஸ்டார்’ விருது வழங்கிப் பாராட்டுகிறது அவள் விகடன்.