உலகளவில் செஸ் நட்சத்திரங்களாக வெற்றிகள் குவித்துவரும் நம் தமிழகப் பெருமைகள் பிரக்யானந்தா, வைஷாலியின் அம்மா... நாகலஷ்மி. அர்ஜூனா விருது, இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம், செஸ் ஒலிம்பியாடில் தங்கம் என இந்தப் பிள்ளைகளின் சாதனைகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. அவர்களின் நங்கூரம்... இந்த இரும்பு மனுஷி. தன் கணவரின் வருமானம் குடும்பச் செலவு, வீட்டுப் பெரியவர்கள் மருத்துவச் செலவுக்கே போதாமையாக இருந்தாலும், தன் குழந்தைகளின் செஸ் பயிற்சிக்கான செலவுகளை இழுத்துப்பிடித்தவர். அக்காவும், தம்பியும் கருப்பு, வெள்ளைக் கட்டங்களுக்குள் சமராடத் தொடங்கினர். செஸ் வகுப்புகளுக்குச் செல்ல இரண்டு குழந்தைகளையும் கையில் பிடித்தபடி பேருந்து, ஷேர் ஆட்டோ என ஏறி இறங்கிய இந்தத் தாய், இப்போது வெளிநாட்டுப் போட்டிகளுக்காக அவர்களுடன் விமானங்கள் ஏறி, இறங்கிக்கொண்டிருக்கிறார். அஜர்பைஜான் நாட்டில் நடந்த உலகக்கோப்பை செஸ் தொடரில், கிராண்ட் மாஸ்டர் கார்ல்சனை எதிர்த்து பிரக்ஞானந்தா செஸ் விளையாடிக் கொண்டிருந்தபோது வெளியே பதற்றம் உறைந்து நின்றிருந்த நாகலஷ்மியின் புகைப்படம் உலகளவில் ட்ரெண்ட் ஆனது. தன் பிள்ளைகள் போட்டி அரங்குக்குள் மெர்சல் செய்துகொண்டிருக்க, கையில் பை, நெற்றியில் விபூதி, மனதில் நம்பிக்கையும் பிரார்த்தனையுமாக வெளியே நின்றுகொண்டிருக்கும் நாகலஷ்மியின் காட்சி... தங்கள் பிள்ளைகள் நிகழ்த்தப்போகும் சாதனைகளுக்காகக் காத்துக்கொண்டிருக்கும் அத்தனை அம்மாக்களுக்கான ஆக்ஸிஜன்.
ஒன்றல்ல, இரண்டல்ல... பல பல முறை ஈன்ற பொழுதினும் பெரிதுவந்துகொண்டே இருக்கும் நாகலஷ்மிக்கு 'பெஸ்ட் மாம்' விருது வழங்கி உவகைகொள்கிறது அவள் விகடன்.