‘உன்னால் என்ன முடியும்?’ என்று எளிய மக்களிடம் கேட்பது அதிகார வர்க்கத்தின் வழக்கம். ’எங்களால் முடியாதது என்ன?’ என்று திருப்பிக்கேட்டு, செய்துகாட்டியிருப்பவர் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வாழும் காடர் பழங்குடியினப் பெண் வீ.ராஜலெட்சுமி ஜெயபால். மூன்று குழந்தைகளின் அம்மா, காடு, விவசாயம் என்று தன் கல்லார்குடி கிராமத்தில் வாழ்ந்துவந்தவர். 2019-ம் ஆண்டு அக்கிராமத்தைச் சிதைத்தது மழை, வெள்ளம். 25 குடும்பத்தினர் உயிரைக் கையில்பிடித்தபடி வனத்தில் வேறு பகுதிக்குச் சென்றனர். அது புலிகள் காப்பகம் எனச்சொல்லி அனுமதிக்காத வனத்துறை, அந்த பூர்வகுடிகளை காட்டைவிட்டு வெளியேற்றியது. அங்குதான் ஆரம்பித்தது ராஜலெட்சுமியின் போராட்டம். தாங்கள் தெப்பக்குளம் மேடு பகுதியில் குடியேற அரசிடம் மனு அளித்தார். கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். வனஉரிமைச் சட்டத்தை சுட்டிக்காட்டி மக்களைத் திரட்டி அவர் அறவழியில் போராட, பட்டா கொடுத்தது அரசு. தற்போது, அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் அங்கு 25 வீடுகள் கட்டி குடியேறியுள்ளனர் மக்கள். ராஜலெட்சுமி முன்னெடுப்பின் காரணமாக ஆனைமலை தொடரில் பல பழங்குடி கிராமங்களுக்குப் பட்டா வழங்கப்பட்டுள்ளன. முத்தாய்ப்பாக... முதன்முறையாக, சமுதாய வனஉரிமை மூலம் புலிகள் காப்பகத்தில் சுமார் 15,000 ஏக்கர் நிலத்தை அரசிடமிருந்து பெற்றுள்ளனர் இம்மக்கள்.
நாடு முழுக்கப் புலிகள் காப்பகங்களிருந்து பழங்குடிகள் வெளியேற்றப்படும் சூழலில், தங்கள் நிலத்தை போராடி மீட்டிருக்கும் இந்த வனமகளுக்கு ’பசுமைப்பெண்’ விருது வழங்கி உடன் நின்று உச்சிமுகர்கிறது அவள் விகடன்.