’என் கையில் ஒரு வருமானம் வேண்டும்’ என்று நினைத்த ஒரு பெண்ணின் தேடல், இன்று ஒரு கிராமத்தையே உழைக்கும் பெண்களின் ஊராக மாற்றியிருக்கிறது. விழுப்புரம் மாவட்டம், தென்னமாதேவியில் 2020-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அவர்களது 'கலைமகள் சுடுமண் சிற்பக்குழு', மகளிருக்கான மலர்ச்சி. உழைப்புக்கு ஏற்ற கூலி கிடைக்காத உள்ளூர் வேலையால் மனம் வதங்கிய மலர்விழி, தன் ஊரில் தன்னைப்போலவே திக்குத் தெரியாமல் திணறிய 19 பெண்களை ஒருங்கிணைத்து மகளிர் குழுவைத் தொடங்கினார். உழைக்கத் தயாராக இருந்த அப்பெண்களுக்கு, வழியைக் காட்டியது அரசு. மகளிர் குழுக்களுக்கு அரசு வழங்கிய இலவச களிமண் கலை பொருள்கள் தயாரிப்புப் பயிற்சியைப் பெற்றார்கள். பத்தாயிரம் ரூபாய் முதலீட்டில் தொழிலைத் தொடங்கினார்கள். மண் பொருள்கள் தயாரிப்பு ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கானது எனக்கூறி தங்கள் வீடுகளில் எழுந்த எதிர்ப்பை புறந்தள்ளினார்கள். சமத்துவ உழைப்பை நோக்கி நகர்ந்தார்கள். விளக்குகள் தயாரிப்பில் தொடங்கிய இவர்களின் தொழில், அலங்காரப் பொருள்கள், குதிரைகள், உருளிகள் என விரிந்தது. மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்தார்கள். தொழில் வளர்ந்தது. ஊரில் 100 பெண்களுக்குப் பயிற்சி வழங்கி உற்பத்தியை அதிகரித்தார்கள். இன்று அப்பெண்கள் ஒவ்வொருவரும் தினம் ஆயிரம் ரூபாயை தங்கள் வீட்டிலிருந்தே சம்பாதிக்கும் அசாத்திய சூழலை உருவாக்கியுள்ளார்கள்.
குடும்பத்தை தாங்கி, கிராமத்தையே தலைநிமிர்த்தி, சுயமரியாதை நடைபோடும் ’கலைமகள் சுடுமண் சிற்பக் குழுவு’க்கு வெற்றிப்படை விருது வழங்கி கிரீடம் சூட்டுகிறது அவள் விகடன்.