மொழியின் இனிமை, வலிமை, தொன்மை, புதுமை, செம்மை என எல்லாம் கிளர்ந்தெழும் எழுத்துக்குச் சொந்தக்காரர்... தேன்மொழி தாஸ். மேற்குத் தொடர்ச்சி மலையின் மணலார் தேயிலைத் தோட்டத்தில் பிறந்த இவரின் இயற்பெயர், ரோஸ்லின் ஜெயசுதா. 'உலகம் என்னிடமிருந்துதான் தோன்ற வேண்டும்' என்ற மார்க்ஸின் கவிதையை முதன்முதலில் வாசித்தபோது, அவருக்கு வயது 6. கவியாகும் கனவுகளைச் சுமந்தபடியே செவிலியர் படிப்பை முடித்து, சென்னையின் பிரபலமான மருத்துவமனையில் சில வருடங்கள் பணிபுரிந்தார். இவரது முதல் கவிதைத் தொகுப்பான 'இசையில்லாத இலையில்லை', பல விருதுகளைப் பெற்றது. 'அநாதி காலம்', ' ஒளியறியா காட்டுக்குள்', 'நிராசைகளின் ஆதித்தாய்' எனத் தொடர்ந்த இவரின் படைப்புகள் எல்லாம் விருதுகளை ஈர்த்தன. இயக்குநர் பாரதிராஜாவின் 'ஈரநிலம்' திரைப்படத்தின் மூலம் பாடலாசிரியர் மற்றும் வசனகர்த்தாவாக அறிமுகமானவர், அப்படத்துக்கு தமிழ்நாடு அரசின் சிறந்த வசனகர்த்தாவுக்கான விருதையும் பெற்றார். எழுத்தாளுமை கி.ராஜநாராயணனின் 'காய்ச்சமரம்' கதையை சுஹாசினி மணிரத்னம் குறும்படமாக எடுத்தபோது, அதற்கு வசனம் எழுதி கவனம் பெற்றவர். 40-க்கும் மேலான திரைப்படப் பாடல்களை எழுதியிருப்பவர். 'தெக்கத்திப் பொண்ணு' நெடுந்தொடருக்கு வசனமும், 'கனா காணும் காலங்கள்', 'காதலிக்க நேரமில்லை', 'அன்பே வா' தொடர்களுக்குப் பாடல்களும் எழுதி ரசிக்கவைத்தவர்.
நாம் வாழும் நில மக்களின் மனங்களை, அவலங்களை, போராட்டங்களை, பெண் மன நுட்பங்களை, அரசியலை... சமத்துவ நுண்மையோடு எழுதும் இந்தத் தனித்துவ மைக்கு, 'இலக்கிய ஆளுமை’ விருது வழங்கி மகிழ்கிறது அவள் விகடன்.