தமிழ் சினிமாவில் ’கனவுக் கன்னி’, ’நம்பர் 1 ஹீரோயின்’ பட்டம் பெற்றவர்கள் உண்டு. இவற்றுடன் ஆக்டிங் க்வீன், டான்ஸ் க்வீன், ஆக்ஷன் க்வீன் என எல்லா பட்டங்களையும் வாரியெடுத்துக்கொண்டது... சிம்ரனின் சிம்மாசனம். மும்பையில் பஞ்சாபி குடும்பத்தில் பிறந்து, சேனல் தொகுப்பாளராகத் தன் கரியரைத் தொடங்கினார் சிம்ரன். இந்தி உள்ளிட்ட சில மொழிப் படங்களில் அறிமுகமானவருக்கு தமிழ்நாடு கொடுத்தது சிவப்புக் கம்பள வரவேற்பு. 1997-ம் ஆண்டு 'வி.ஐ.பி', ‘நேருக்கு நேர்’ என்று திரையில் தோன்றியவர் இரண்டே ஆண்டுகளில் உச்சத்துக்குச் சென்றார். கமல், விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்கள் திரைப்படங்களில் மோஸ்ட் வான்டட் ஹீரோயின் ஆனார். 'வாலி', ‘துள்ளாத மனமும் துள்ளும்', 'பிரியமானவளே' என நம் மனதில் அமர்ந்தவர், 'பார்த்தேன் ரசித்தேன்' படத்தில் வில்லியாக மிரட்டியது... மாஸ். 'கன்னத்தில் முத்தமிட்டால்' திரைப்படத்தில் ஸோ ஸ்வீட் அம்மா, 'கோவில்பட்டி வீரலட்சுமி'யில் ஆக்ஷன் அவதாரம் என சிம்ரனின் திரைவிருந்து வெரைட்டியானது. ‘தொட்டுத் தொட்டுப் பேசும் சுல்தானா’, ‘ஆல்தோட்ட பூபதி நானடா’, 'தகதகதகதகவென ஆடவா’ என சிங்கிள் சாங்ஸில் தோன்றியவரின் டான்ஸ்... பக்கா வைப். 'பேட்ட', 'ராக்கெட்ரி', ‘அந்தகன்’ என இரண்டாவது இன்னிங்ஸிலும் அசத்தி வருபவர் பல மொழிகளிலும் 90-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் டார்லிங்காக இருக்கும் இந்த தேவதைக்கு 'எவர்கிரீன் நாயகி' விருது வழங்கி திளைக்க ரசிக்கிறது அவள் விகடன்.