தமிழ்ப் பெண்களின் திருத்தமும் மலையாளப் பெண்களின் பொலிவும் இணைந்ததோர் அழகு ரகம்... நிகிலா விமல். படிய உடுத்திய காட்டன் புடவையில் பாந்தமாக வசீகரித்த ’வாழை’ திரைப்பட பூங்கொடி டீச்சரின் வகுப்பில் சேர்ந்துள்ள ரசிகர்கள் பலர். கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தில் பிறந்த நிகிலாவுக்கு சிறு வயது முதலே கலைகள் மீது ஆர்வம். பரதநாட்டியம், குச்சிப்புடி நடனங்கள், தனி நடிப்பு எனக் கற்றுத் தேர்ந்தவர். குழந்தை நட்சத்திரமாக மலையாள திரையுலகில் தன் பயணத்தை தொடங்கியவருக்கு 'வெற்றிவேல்' திரைப்படம் தமிழில் வெல்கம் சொன்னது. ’கிடாரி’ படத்தில் ரசிக்கவைத்தது இவரது ஹோம்லி லுக். ‘போர்த்தொழில்’, ’மத்தகம்’, ‘குருவாயூர் அம்பலநடையில்’ என இவர் கிராஃபில் இது ஹிட் காலம். திரையில் மட்டுமே நடிப்பு எனும் விதமாகப் பேட்டிகளில் இவர் பேசும் பட் படார் வார்த்தைகள், சோஷியல் மீடியாவில் வைரல்.
தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் நேர்த்தியான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து, யதார்த்தமான நடிப்பின் மூலம் உள்ளம் கொள்ளை கொள்ளும் நிகிலா விமலுக்கு, ‘யூத் ஸ்டார்’ விருது வழங்கி சிறப்புச் செய்கிறது அவள் விகடன்.