பிறப்பின்போதே தங்களுடன் ஒட்டிவந்த உடல் தடைகளைத் தகர்த்தெறிந்து உலக சாதனை படைத்திருக்கும் அசாதாரண பெண்கள், துளசிமதி முருகேசன், மனிஷா ராமதாஸ் மற்றும் நித்ய ஸ்ரீ சிவன். சமீபத்தில் பாரிஸில் நடந்த பாராலிம்பிக்ஸில் இறகுபந்து விளையாட்டில் இந்தியாவுக்கு ஒரு வெள்ளி, மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றுவந்திருக்கும் புயல் வீரர்கள். எளிய குடும்பத்தைச் சேர்ந்த துளசிமதிக்கு அவர் அப்பா தூணாக உடன் நிற்க, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உதவியோடு மேலேறி வந்தார். பேட்மின்டனில் மனிஷா ராமதாஸ் கடகடவென எட்டிய உயரம் வியப்புக்குரியது. தீர்க்கமான உடல்மொழியும் இறுதிவரை தொய்வின்றி களமாடும் போர்க்குணமும் இவரின் பெரும்பலம். இவரது வெளிநாட்டுப் போட்டிச் செலவுகளுக்குப் பணம்திரட்ட இவர் குடும்பத்தினர் சந்தித்த சிரமங்கள் கலங்கவைப்பவை. 2016 ஒலிம்பிக்ஸில் பி.வி.சிந்து வென்ற வெள்ளி, பெரும் பட்டாளத்தை பேட்மின்டனை நோக்கி நகர்த்தியது. அப்படி உருவெடுத்த நித்ய ஸ்ரீ சிவன், தனது கடுமையான உழைப்பால் குறுகிய காலத்தில் பெரிய வெற்றி பெற்றிருக்கும் சூறாவளி. ’எங்களால் முடியும் என்றால் எல்லோராலும் முடியும்தானே’ என்பதுதான் இப்பெண்கள் தங்கள் ராக்கெட்கள் மூலம் சொல்லும் மெசேஜ்.
’20 வயதுகளில் இன்னும் பல இமய சாதனைகள் தொட விரைந்துகொண்டிருக்கும் இந்த தங்கப்பெண்களுக்கு, 'சிங்கப்பெண்' விருதளித்து உவகைகொள்கிறது அவள் விகடன்.