கல்லூரியில் படித்துக்கொண்டே இண்டியன் ஏர்லைன்ஸில் ஏர்ஹோஸ்டஸாகப் பணிபுரிந்துகொண்டிருந்தார்... காஞ்சனா. அவரை ஹீரோயின் ஆக்கியது ’காதலிக்க நேரமில்லை' திரைப்பட வாய்ப்பு. அழகிலும் நடிப்பிலும் மிளிர்ந்தவருக்கு, பல மொழிகளிலும் வந்து குவிந்தன வெற்றிப் பட வாய்ப்புகள். எம்.ஜி.ஆர், என்.டி.ஆர், நாகேஸ்வர ராவ், ராஜ்குமார், பிரேம் நசீர் என ஐந்து மொழி சூப்பர் ஸ்டார்களுடன் 250-க்கும் மேற்பட்ட படங்களில் முத்திரை பதித்தார். 'சிவந்த மண்' திரைப்படத்தில் நடிகர் திலகத்துக்கே ஈடுகொடுத்து, மகாராணியாகவும் போராளியாகவும் மாறுபட்ட நடிப்பில் அசரடித்தார். 'பட்டத்துராணி' பாடல் எக்ஸ்பிரஷன்களோ 'வாவ்' ரகம். 'அதே கண்கள்' படத்தில் அஞ்சி ஒடுங்கியதும் இந்த அழகிய கண்கள்தான். ’பாமா விஜயம்,’ ‘துலாபாரம்’, ‘சாந்தி நிலையம்’ என எண்ணற்ற க்ளாஸிக் படங்களில் காலத்தால் அழியாது உறைந்திருக்கிறது இவரது நவரசம். 1960, 70-களின் கலை பொக்கிஷமான காஞ்சனாவின் இன்னொரு முகம், ஈகை குணம். சூப்பர் சீனியருக்கு 'கலை நாயகி' விருது வழங்கிப் போற்றுகிறது அவள் விகடன்!