தமிழ் இலக்கியச் சூழலில் படைப்பாளர், மொழிபெயர்ப்பாளர், ஆய்வாளர் எனப் பல முகங்களுடன் இயங்குகிறவர், அமரந்தா. தனிமையிலிருந்து விடுபட எழுத ஆரம்பித்ததாகக் கூறுபவர். இவரது முதல் படைப்பான ‘சுற்றத்தார்’, தி. ஜானகிராமன் குறுநாவல் போட்டியில் முதல் பரிசு பெற்றது. தனது கிணற்றுத்தவளை மனநிலையை உடைக்க எண்ணி, லத்தீன் அமெரிக்க இலக்கியங்களை தமிழில் மொழிபெயர்த்தார். அதில் முன்னோடியாகவும், தனிச்சுடராகவும் ஒளிர்ந்தார்; நவீன இலக்கியத்துக்குப் புதிய சாளரத்தை திறந்துவிட்டார். வங்காள எழுத்தாளர் மகா ஸ்வேதா தேவி எழுதிய, பழங்குடிப் பெண்களின் வலிகளைத் தாங்கிய சிறுகதைகளை, தனது குருதிப்புனல் எழுத்துகளில் மொழிபெயர்த்தார் அமரந்தா. பெண்ணியம் சார்ந்த இவரது படைப்புகள், மொத்த சமூகத்தையும் கேள்விக்குட்படுத்துகின்றன. கதைகளில் புனைவையும் வாழ்வையும் இணைக்கும் நுட்பம், மொழிபெயர்ப்புகளில் சரளமான வாசிப்பின் சாத்தியம், கட்டுரைகளில் வரலாற்று தரவுகள் எனப் படைக்கும் நேர்த்தியாளர். நிதர்சனத்தைப் பேசியபடியே மாற்றத்திற்கான நெருப்பை மூட்டும் அமரந்தாவுக்கு 'இலக்கிய வல்லமை' விருதளித்து உவகைகொள்கிறது அவள் விகடன்!