அரசால் மறக்கப்படுகிற, ஆதிக்கத்தால் அடக்கப்படுகிற அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான தீப்பந்த வழிகாட்டி, கீதா ராமகிருஷ்ணன்.
கட்டுமானத் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான முழக்கங்களை தன் சகாக்களுடன் இணைந்து மத்திய, மாநில அரசுகளின் செவிப்பறைகள் அதிர எழுப்பியவர். தமிழ்நாட்டில் 1970-களின் பிற்பகுதியில் இவர்கள் முன்னெடுத்த போராட்டங்களால், மாநில அளவிலான கட்டுமானத் தொழிலாளர்கள் வாரியம் ஏற்படுத்தப்பட்டது. அது, 1996-ல் தேசிய அளவிலான சட்டம் இயற்றப்படக் காரணமாக அமைந்தது. இவற்றுக்கெல்லாம் கருவியாக முன்னின்று போராடியவர், கீதா ராமகிருஷ்ணன். அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் தொழிலாளர் நல வாரியங்கள் உருவாக வித்திட்டார். குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, கொத்தடிமைத் தொழிலாளர் விடுதலை, குடிசைப் பகுதி மக்களுக் கான பட்டா உரிமை, பெண்கள் பாதுகாப்பு என... இவர்களது இருட்டையெல்லாம் எரிக்க நாட்டின் எந்த மூலையிலும் தினம் தினம் உதித்துக் கொண்டிருக்கும் நெருப்புப் புயல்.
இப்படி, அரை நூற்றாண்டுக்கும் மேலாக சமூகப் போராளியாக இயங்கிக்கொண்டிருக்கும் கீதா ராமகிருஷ்ணனுக்கு `அவள் ஆளுமை' விருதளித்து வணங்குகிறது அவள் விகடன்!