8 வயதாகும் குட்டிப் பட்டாசு தியா, இதுவரை ஏறியுள்ள ஆன்மிக மேடைகள்... 120-க்கும் மேல். இரண்டு மணி நேரம் தொடர்ந்து கச்சேரி செய்தாலும், இறுதி நொடி வரை எனர்ஜி குறைவதே இல்லை இந்தப் பூங்குயிலுக்கு.
அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் இவர் பாடிய 'குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்' பாடலை மக்கள் ரசித்துச் சிலிர்த்தனர். மக்கள், அனுதினமும் வேண்டும் அத்தனை தெய்வங்களின் பாடல்களையும் ஆத்ம விருந்தாக்குகிறது இந்தத் தேன்சிட்டு. முருகனின் அறுபடை வீடுகள், ஊர்த் திருவிழாக்கள், குடமுழுக்குகள், வெளிநாடுகள் வரை என... தற்போது எங்கெங்கும் தியா குரல்மயம். தியா, பாடல் கச்சேரியுடன் சொற்பொழிவும் ஆற்றத் தொடங்கியிருப்பது செம்மை.திருப்புகழ், தேவாரம், திருவாசகம், கந்த சஷ்டிகவசம், கோளறு பதிகம், பெருமாள் பாசுரங்கள் என அனைத்தும் தவழ்கின்றன இவர் நாவின் நுனியில். இசை, தமிழ் உச்சரிப்பு, உடல் மொழி, தெளிவான பேச்சு என வசீகரிக்கும் இந்த வளர்பிறைக்கு... 'லிட்டில் சாம்பியன்' விருது வழங்கி ஆரத்தழுவுகிறது அவள் விகடன்!