தமிழ்நாட்டின் சமீபத்திய செல்லக் குரல்... இனியா ராஜகுமாரன். Zee தமிழ் சரிகமப நிகழ்ச்சியின் போட்டியாளரான இந்தக் கல்லூரி மாணவி, நடிகை தேவயானி - இயக்குநர் ராஜகுமாரன் தம்பதியின் மகள். பெற்றோரின் புகழை தனது விசிட்டிங் கார்டு ஆக்க விரும்பாத செல்ஃப் மேடு டேலன்ட். கர்னாடக சங்கீதம், கீ போர்டு, பியானோ, பரதம், சிலம்பம், சுருள் வாள் வீச்சு, கத்திச் சண்டை, நெருப்புப் பந்தம் என இவர் கற்றுள்ள கலைகள் பல. போட்டி மேடையில் ‘மயில்போல பொண்ணு ஒண்ணு’ பாடலை குயில்போல பாடியவரை, தமிழ் மக்கள் தங்கள் வீட்டு இசை மகளாக வாரியணைத்துக் கொண்டனர். சிறப்பான பாடல் தேர்வு, எளிமையான ஆடைகள், பாந்தமான பேச்சு என ஒவ்வொரு சுற்றிலும் மில்லியன் வியூவ்ஸ்களை அள்ளினார். போட்டியாளர் இனியா, பாடகி இனியாவாக ஒளிரத் தொடங்கினார். டிரெண்டிங் டார்லிங்காகக் கலக்கிவரும் இனியாவுக்கு, வைரல் ஸ்டார் விருது வழங்கி மகிழ்கிறது அவள் விகடன்!