எழுத்தாளர், பத்திரிகையாளர், நாடகக் கலைஞர், ஆவணப்பட இயக்குநர்... பிரேமா ரேவதி. இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனிடம் அசோசியேட் டைரக்டராகப் பணியாற்றிக்கொண்டிருந்தவர், சுனாமி தன்னார்வலராக நாகப்பட்டினம் சென்றார். அங்குள்ள பழங்குடி, நாடோடியினக் குழந்தைகள்... உலகிடமிருந்து தனித்துவிடப்பட்டு, கல்வியிலிருந்து தள்ளிவைக்கப்பட்டிருந்த காட்சி, அவரது சமநிலையைக் குலைத்தது. இனி தன் வாழ்வு அவர்களுக்காகத்தான் என்ற அளப்பரிய முடிவு, அவரால் எடுக்கப்பட்டது. அப்பகுதியில் ’வானவில்’ உண்டு உறைவிடப் பள்ளியை 2005-ல் ஆரம்பித்தார்.
பூம்பூம் மாட்டுக்கார ஆதியன் இனத்தினர், நாடோடியினத்தினர், இருளர் சமுதாயங்களில் இருந்து ’வானவில்’ அறக்கட்டளை மூலமாக இதுவரை 286 பழங்குடி மாணவர்கள் கல்லூரிப் படிப்பை எட்டியுள்ளனர். ஐந்து மாவட்டங்களில் உள்ள 19 மாலை நேர கல்வி மையங்களில் 1,250 பழங்குடி குழந்தைகள் பயின்று வருகிறார்கள். கேட்பாரற்றிருந்த குழந்தைகளுக்குக் கல்வியைக் கொடுத்து, சமூகத்தின் மைய நீரோட்டத்துடன் இணைத்துக் கொண்டிருக்கும் பிரேமா ரேவதிக்கு, ’கல்வித் தாரகை’ விருது வழங்கிப் பெருமிதம்கொள்கிறது அவள் விகடன்!