கன்னியாகுமரி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையில் வசிக்கிறார்கள் இந்த காணி பழங்குடி பெண்கள். விளைபொருள்களுடன் மலையில் இருந்து ஆண்கள் மட்டுமே இறங்கி விற்பனை செய்தபோது, தரகர்கள் தலையீட்டால் உரிய விலை கிடைக்கவில்லை. இந்நிலையில்தான், மகளிர் சுய உதவிக் குழுவைத் தொடங்கினார்கள் இந்தப் பெண்கள். தங்கள் விளைபொருள்களுடன் மலைவிட்டு வந்தார்கள். தரகர்களைத் தவிர்த்து, வெளிமாவட்டங்கள் வரை நேரடி ஸ்டால்கள் போட்டதில் கிடைத்தது நல்ல லாபம். சக பழங்குடிப் பெண்களும் இந்தச் சங்கிலியில் இணைய, திரண்டது 300 பெண்கள் கொண்ட மாபெரும் படை. பிறந்தது 'திருவட்டார் மகளிர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்’. இவர்களது மலைகளில் இயற்கை முறையில் விளைவிக்கப்படும் மிளகு, கஸ்தூரி மஞ்சள், ரப்பர் உள்ளிட்ட பொருள்கள் தற்போது தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிறுவனத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் மாதம் 20,000 ரூபாய் வரை வருமானம் ஈட்டும் வெற்றியாளர். மலைமகள்களுக்கு 'வெற்றிப் படை' விருது வழங்கி உச்சிமுகர்ந்து மெச்சுகிறது அவள் விகடன்!