விஷாலா, ஒரு சார்ட்டர்டு அக்கவுன்டன்ட். நாமறிந்த நல்லதொரு நடிகர் கிஷோரின் மனைவி. கிஷோர், சினிமாவில் பிஸியாக, விஷாலா கழனி நோக்கி நடந்தார். பெங்களூருவை அடுத்த கரியப்பனதொட்டி கிராமத்தில் புதர்மண்டிக்கிடந்தது அவர்களது ஏழு ஏக்கர் நிலம். விஷாலாவின் கடும் முயற்சியால் தற்போது சிறுதானியங்கள், பழங்கள், காய்கறிகள், மரங்கள் என அவ்விடத்தில் பசுமை பூத்துக் குலுங்குகிறது. வனப்பகுதியை ஒட்டியிருப்பதால் விலங்குகள் தொல்லை, சுரங்கத்தொழில் என பாதிக்கப்பட்டனர் அப்பகுதி பழங்குடி விவசாயிகள். அதனால் மாற்றுத்தொழிலுக்குச் சென்ற நூற்றுக்கணக்கான பெண்களை ஒருங்கிணைத்தார் விஷாலா. 'பஃபல்லோ பேக் கன்ஸ்யூமர்ஸ்' எனும் இயக்கத்தைத் தொடங்கி, அவர்களுக்கு இயற்கை விவசாயம் கற்றுக்கொடுத்தார். இவரது வழிகாட்டலில், நிலமில்லாத ஏழைப் பெண் விவசாயிகளும், கூட்டுப் பண்ணைய முறையில் குத்தகை நிலத்தில் வேளாண்மை செய்யத் தொடங்கினர். அவர்களது விளைபொருள்களுக்கு, பெங்களூருவிலுள்ள விஷாலாவின் வீடுதான் அங்காடி. உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோரை இணைத்து, விவசாயிகளின் வாழ்க்கைக்குப் புத்துயிரூட்டிவரும் விஷாலாவுக்கு, 'பசுமைப்பெண்' விருதளித்துப் பாராட்டுகிறது அவள் விகடன்!