கோவையைச் சேர்ந்த தடகள வீராங்கனை, வித்யா ராம்ராஜ். அப்பா லாரி ஓட்டுநர், அம்மா இல்லத்தரசி. அரசுப் பள்ளியில் படித்தபோதே தடை ஓட்டத்திலும், தொடர் ஓட்டத்திலும் மாஸ் காட்டினார். 14 வயதில் தமிழக அணியில் இடம்பெற்று பதக்கங்களைக் குவிக்கத் தொடங்கியது இந்தப் புயல். 2019-ம் ஆண்டு இந்திய அணியில் இடம் பிடித்தவர், வேர்ல்டு சாம்பியன்ஷிப், ஏசியன் கேம்ஸ் என வென்று வந்த பதக்கங்கள் பல. 2023-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், 400 மீட்டர் தடை ஓட்டத்தில், பி.டி. உஷாவின் 55.42 விநாடிகள் என்ற 39 ஆண்டுகள் தேசிய சாதனையை சமம் செய்தன அவரது எக்ஸ்பிரஸ் கால்கள். ஆகப்பெரும் விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக்ஸில் 2024-ம் ஆண்டு பங்கேற்றதன் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்தார். அடுத்து, இந்த ஆண்டுக்கான ஏசியன் சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்று, இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்துள்ளார். எளிய குடும்பத்திலிருந்து வந்து உலக மைதானங்களில் தடம்பதித்துக்கொண்டிருக்கும் இந்த வைராக்கிய வைரத்துக்கு, சிங்கப்பெண் விருது வழங்கித் தட்டிக்கொடுக்கிறது அவள் விகடன்!