சென்னை, கண்ணகி நகர் பெண்கள் கபடி குழு. இன்று உலக பிரபலம். ஆனால், இக்குழுவில் இடம்பெற்றுள்ளவர்களின் நிலைதான், கேள்விக்குறி. பெரும்பாலானவர்களின் பெற்றோர்கள் தூய்மைப் பணியாளர்கள். மூன்று நேர உணவு இல்லை, மைதானம் இல்லை, ஸ்போர்ட்ஸ் ஷூக்கள் இல்லை, சத்தான உணவு இல்லை. இருந்தும், பயிற்சியாளர் ராஜி தனது சொந்தப் பணத்தால் இந்த `இல்லை'களை முடிந்தவரை ஈடுகட்டினார். வட்டார, மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிகளைக் குவிக்கத் தொடங்கியது இந்தக் குழு. மழைபெய்தால் தண்ணீர் தேங்கும் பூங்காதான் மைதானம். என்றாலும், விடாமுயற்சிதான் இவர்களது பலம். இக்குழுவில் இருந்து தற்போது ஆறு பேர் தமிழக பெண்கள் கபடி அணியில். இரண்டு பேர் இந்திய பெண்கள் கபடி அணியில். குழுவின் 16 வயது எனர்ஜி பாம் கார்த்திகா, இந்திய அணியின் துணை கேப்டன். இந்தாண்டு பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் பெண்கள் கபடிப் போட்டியில் தங்கம் வென்றது இந்திய பெண்கள் கபடி அணி. வாகைசூட தோள் கொடுத்தவர், துணை கேப்டன், நம் கார்த்திகா. கண்ணகி நகருக்கு வெற்றி முகம் கொடுத்து வரும் இந்தக் கபடி குழுவுக்கு Special Achievers Award வழங்கிப் பூரிக்கிறது அவள் விகடன்!