`நம்ம வீட்டுப் பிள்ளை’ எனத் தமிழ்நாடே கொண்டாடும் நடிகர் சிவகார்த்திகேயனை, அப்படி ஒரு நல்ல பிள்ளையாக வார்த்தெடுத்தவர்... அவரின் அம்மா ராஜி தாஸ். காவல்துறை அதிகாரியான அப்பாவை பறிகொடுத்தபோது, 17 வயது சிவ கார்த்திகேயனுக்கு. அவர் அக்கா, எம்.பி.பி.எஸ் முதலாமாண்டு மாணவி. தன் சோகத்தைப் புதைத்து, வலிகளைக் கடக்கும் வலிமையைப் பெற்றார், ராஜி தாஸ். பிள்ளைகளைப் படிக்கவைத்தார். அப்பாவின் இன்மைக்கும் சேர்த்து அன்பூட்டினார். மிடில் க்ளாஸ் குடும்பங்களைப் பதறவைக்கும் மீடியா பாதையை டிக் செய்தார், சிவகார்த்திகேயன். சம்பள உறுதியை அம்மாவுக்குக் கொடுக்க முடியாமல், எஸ்.கே கிடந்து உழைத்து ஓடிக்கொண்டிருந்த காலம். மகன் கலங்கி வரும்போதெல்லாம் அம்மா தலைகோதிவிட, இப்போது அவர் பாக்ஸ் ஆபீஸ் டான். எஸ்.கே-யின் ஒவ்வொரு வெற்றியையும், தமிழ்நாடே தனதெனக் கொண்டாடுகிறது... உணர்வுரீதியான ஓர் உரிமையுடன்.
`நம்ம பையனும் ஜெயிச்சிடுவான்’ என்ற நம்பிக்கையை மிடில் க்ளாஸ் அம்மாக்களுக்கு ஆழ ஊன்றியிருக்கும் ராஜி தாஸுக்கு, `பெஸ்ட் மாம்' விருது வழங்கி மரியாதை செய்கிறது அவள் விகடன்!