`இவர் நம்மில் ஒருவர்’ என்று உணர
வைக்கும் அழகு ரகம்... நிமிஷா சஜயன். அதே நேரம், நடிப்பில் வியக்கும் வைக்கும் சிகரம். மும்பையில் வளர்ந்து, 2017-ல் மல்லுவுட்டுக்கு வந்தார் நிமிஷா. வழக்கறிஞர், மலைவாழ் பள்ளி மாணவி என மாறுபட்ட பல கதாபாத்திரங்களில் மிரட்டியெடுத்தார். ஹீரோயினுக்கான ஸ்டீரியோ டைப்பை உடைத்தது `சித்தா’ பட தூய்மைப் பணியாளர் கேரக்டர். அதில், நிமிஷாவின் உணர்வுபூர்வமான நடிப்பு தமிழ் ரசிகர்களுடன் கைகுலுக்கியது. `ஜிகர்தண்டா’ படத்தில் `மலையரசி’யாக மிரட்டினார். `டி.என்.ஏ’ படத்தில் அவரது பெரிய கண்களே பாதி நடிப்பைக் கொப்பளித்தன. `டப்பா கார்டெல்’ இந்தி வெப் சீரிஸில் பாலிவுட்டிலும் பட்டாசாக வெடித்தது இவரது பெர்ஃபார்மன்ஸ்.
சி.ஏ.ஏ-வுக்கு எதிராகப் போராட்டக் களத்துக்கு வந்தது, குடும்ப வன்முறை, வரதட்சணைக்கு எதிரான பிரசாரங்களுக்கு அம்பாஸிடராக நியமிக்கப்பட்டது என, ஆஃப் கேமராவிலும் அதிர்வை ஏற்படுத்தும் அக அழகிக்கு, `பவர்ஃபுல் பெர்ஃபார்மர்’ விருது வழங்கிச் சீராட்டுகிறது அவள் விகடன்!