ஆட்சிப்பணி அதிகாரியாகப் புறப்பட்டு, அடித்தட்டு மக்களின் வாழ்வை நோக்கித் தனது பயணத்தைத் தொடர்ந்தவர் அருணா ராய். சென்னையில் பிறந்தவர், 1968-ம் ஆண்டு ஐஏஎஸ் பணியில் சேர்ந்து, 1975-ல் அதைத் துறந்துவிட்டு நேரடியாக மக்களுடன் பணியாற்றும் பாதையைத் தேர்ந்தெடுத்தார். 1987-ல் ராஜஸ்தானில் `மஸ்தூர் கிசான் சக்தி சங்கதன்' (MKSS) அமைப்பைத் தொடங்கி, ஊரகத் தொழிலாளர்களின் உரிமைகள், குறைந்தபட்ச ஊதியம், ஊழல் ஒழிப்பு, அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை எனப் பல தளங்களில் போராடியவர். இவரது தலைமையில் முன்னெடுக்கப்பட்ட மக்கள் இயக்கங்கள்தான், இந்தியாவின் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) உருவாக வலுவான அடித்தளமிட்டன. சமூகப் பங்களிப்புக்காக `ரமோன் மகசேசே விருது' (2000) உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றவர். இந்தியப் பெண்கள் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக 16 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றியவர். பல்வேறு தேசிய, சர்வதேச அமைப்புகளிலும் முக்கியப் பொறுப்புகளை வகித்தவர். பெண்கள் மேம்பாடு, வறுமை ஒழிப்பு, சமூகப் பாதுகாப்பு என அரை நூற்றாண்டுக்கும் மேலாக மக்களுக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்தவர். 80 வயதைக் கடந்தும் ஓய்வின்றித் தொடர்ந்து ஒலிக்கும் உரிமைக் குரல் இவருடையது. மக்களுக்கு அதிகாரத்தைக் கேள்வி கேட்கும் துணிவையும், உரிமைகளுக்காகப் போராடும் நம்பிக்கையையும் விதைத்த அருணா ராய்க்கு, `அவள் ஆளுமை' விருதளித்து சிரம் தாழ்ந்து வணங்குகிறது அவள் விகடன்.