தலைமுறை மாற்றத்தால் தடுமாறும் நிலைக்குத் தள்ளப்பட்ட லம்பாடி எம்ப்ராய்டரி கலையைத் தங்கள் சொந்த முயற்சியால் மீண்டும் உயிர்ப்பித்திருக்கிறார்கள் சித்திலிங்கி பள்ளத் தாக்குப் பெண்கள். பாட்டிகளிடம் கற்ற கலையை நீலா, கம்மி உள்ளிட்ட பெண்கள், 2006-ல் Tribal Health Initiative அமைப்பின் உதவியோடு மீட்டெடுத்து உருவாக்கியதுதான் `பொற்கை' கைவினைக் கலைஞர்கள் கூட்டமைப்பு. ஓர் அணியாக இவர்கள் இணைந்து, இயற்கைப் பருத்தி, கைத்தறி நெசவு, இயற்கைச் சாயங்கள் கொண்டு நவீன ஆடைகள், குஷன் கவர்கள் உள்ளிட்ட பொருள்களில் தங்கள் மண்ணின் பாரம்பர்யத்தை மிளிரச் செய்கிறார்கள். இதனால் தான் ஒரு சமூகத்தின் அடையாளமாக மட்டுமே பார்க்கப்பட்டு வந்த ஒரு கலை, இன்று அனைவருக்கு மானதாக மாறியிருக்கிறது.
கலைக்குப் புத்துயிர் கொடுத்ததோடு, எண்பது பெண்களுக்குச் சொந்த ஊரிலேயே வேலைவாய்ப்பு வழங்கி, பொருளாதாரச் சுதந்திரத்தையும் தன்னம்பிக்கையையும் விதைத்த பொற்கை பெண்களின் சாதனைக்கு, `வெற்றிப்படை' விருது வழங்கி உச்சிமுகர்கிறது அவள் விகடன்.