பத்தாம் வகுப்பைக்கூடத் தாண்டாத எளிய பெண்கள்... உழைப்புக்கேற்ற ஊதியமின்றித் தவித்த விவசாயக் குடும்பங்கள். இந்தச் சூழலைத் தலைகீழாக மாற்றியது, ஐந்து பெண்களின் ஒற்றுமையில் உதித்த வாழை விவசாயம். ஆளுக்கு ஆயிரம் ரூபாய் முதலீட்டில் விதைக்கப்பட்ட அந்தச் சிறு முயற்சி, இன்று 1,003 பெண் விவசாயிகளை உள்ளடக்கிய `ரங்கம் வாழை உழவர் உற்பத்தி யாளர் நிறுவனம்' என்ற மாபெரும் இயக்கமாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இன்று பத்து லட்சம் ரூபாய் முதலீட்டில் சொந்த பிராண்டில் இயற்கை இடுபொருள்கள், நுண்ணூட்டச் சத்துகள் தயாரித்து தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்கிறார்கள். இதில் 600-க்கும் மேற்பட்டோர் பள்ளிக்
கல்வியை மட்டுமே முடித்தவர்கள். ஆனாலும் மாதம் 20,000 ரூபாய்க்கும் மேல் வருமானம் ஈட்டுவதோடு, பாதியில் நிறுத்திய கல்வியையும் தொடர்கிறார்கள். இங்கே 100 பெண்களை முழுமையாக இயற்கை விவசாயத்துக்கு மாற்றிய அதிசயமும் நடந்திருக்கிறது. பெண்களுக்கு வேண்டிய பொருளாதாரச் சுதந்திரத்தை சாத்தியமாக்கிய இந்த விவசாய சாதனையாளர்களுக்குப் `பசுமை பெண்கள்' விருதளித்து மனம் நெகிழ்கிறது அவள் விகடன்.