ஆக்சிஜனுக்கும் ஆம்புலன்ஸுக்கும் மக்கள் தவித்துநின்ற இரண்டாம் அலைக் காலத்தில் கட்டுப்பாட்டறையின் பொறுப்பாளராகக் களத்தில் இறங்கிச் சூழலை மாற்றியமைத்த தாரேஷ், கேரளாவில் மருத்துவராக அரசுப்பணிக்குள் நுழைந்தவர். கல்வியிலும் பொருளாதாரத்திலும் பின்தங்கிய பெரம்பலூர் மாவட்டத்தின் ஆட்சியராகி தாரேஷ் நிகழ்த்தியது வரலாற்று மாற்றம். முன்தகவல் தராமல் கல்விக்கூடங்களில் நுழைந்து குழந்தைகளோடு சப்பணம் போட்டு அமர்ந்து பாடம்சொல்லிக் கொடுத்த கலெக்டரைக் கண்டு வியந்துபோனது பொதுச்சமூகம். குழந்தைத் திருமணங்களைத் தடுத்து, 300க்கும் மேற்பட்ட பெண்களின் எதிர்காலத்தைக் காத்த தாரேஷ், `பெண் குழந்தைகளைக் காப்போம்' என்ற திட்டத்தை உருவாக்கி, கல்லூரிகளையும் விடுதிகளையும் கொண்டுவந்து பலநூறு பெண்களைப் பட்டதாரிகளாக்கியது போற்றத்தகுந்த பணி. அரசுப்பள்ளிகளைத் தனித்தனியாக வகைப்படுத்தி அவற்றின் மேம்பாட்டுக்காக தாரேஷ் உருவாக்கிய சூப்பர்-30 போன்ற திட்டங்கள் மாநிலம் முழுமைக்குமான வழிகாட்டுதலானது. மாவட்ட நிர்வாகத்தின் பங்களிப்போடு புத்தகக்காட்சியை மக்கள் விழாவாக மாற்றி இளைஞர்களை வாசிப்பின் பக்கம் ஈர்த்த இந்த டாஸ்க் மாஸ்டரை, நம்பிக்கையோடு கொரோனா பேரிடர் கட்டளை மையத்துக்குப் பொறுப்பாக்கியது அரசு. 104 என்ற ஒற்றைத்தொலைபேசி எண், எல்லா நெருக்கடிகளையும் ஏற்று மாநிலம் பேரிடரிலிருந்து மீளப் பெரும்பங்காற்றியது. ‘மக்களைத் தேடி மருத்துவம்’, ‘நம்மைக்காக்கும் 48- இன்னுயிர் காப்போம் திட்டம்' என எளிய மக்களுக்கு நெருக்கமாக மருத்துவத்தைக் கொண்டுசெல்லும் திட்டங்களின் பொறுப்பாளரான தாரேஷ், தாய்சேய் நலத்திட்ட ஆணையராகவும் தேசிய நல்வாழ்வுத் திட்ட இயக்குநராகவும் இருக்கிறார். வரிசைகட்டும் நோய்களால் மக்கள் நிம்மதியிழந்துள்ள நேரத்தில், தாரேஷ் தேசத்தின் நம்பிக்கை!