11 ஆண்டுகளுக்கு முன் வங்கித் தவணைக்கும் குழந்தைகளின் கல்விச் செலவுக்கும் கணக்குப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு சராசரி இளைஞர், இன்று, நான்கு கண்டங்களில் 50,000 வாடிக்கையாளர்களுக்கு வணிகம் செய்யும் 95,000 கோடிக்கும் மேல் மதிப்புகொண்ட ஒரு நிறுவனத்தின் உரிமையாளர். அரசு ஊழியரின் மகனாக திருச்சியில் பிறந்த கிரிஷ், தஞ்சையில் பொறியியலையும் சென்னையில் எம்.பி.ஏ-வையும் முடித்துவிட்டு சில மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றினார். காலத்தின் எதிர்கால நகர்வுகளைக் கணிக்கத்தெரிந்தவர்களே அதைக் கட்டுப்படுத்தும் வல்லமை பெறுகிறார்கள். கிரிஷ், இனி உலகம் 'SaaS' தொழில்நுட்பத்தின்மீதுதான் உருளப்போகிறது என்ற உண்மையைப் புரிந்துகொண்டு இரு நண்பர்களோடு சேர்ந்து தொடங்கிய Freshworks நிறுவனம், இன்று அமெரிக்கப் பங்குசந்தையில் கால்பதித்திருக்கிறது. நம்பர்-1 `SaaS' தொழில்நுட்பனாக உலகை வலம்வரும் கிரிஷ், பலநூறு இளைஞர்களின் ஸ்டார்ட் அப் கனவுகளுக்கு உயிர்தரும் ஏஞ்சலாகவும் மாறியிருக்கிறார். இந்த ரஜினி ரசிகனுக்குக் கால்பந்துமீது தீராக்காதல். இவர் தொடங்கியிருக்கும் `FC Madras’ வெளிச்சமற்றுக் கிடக்கும் கால்பந்து வீரர்களை உலகத்துக்கு அறிமுகப்படுத்துகிறது. தெளிவான திட்டமிடலும் உறுதியான உழைப்பும் இருந்தால் மிடில்கிளாஸ் கனவும் உலக உருண்டையில் வேர் பரப்பும் என்பதே கிரிஷ் என்ற பெருமிதத் தமிழனின் வெற்றி!