சிறை, தனிமனிதர்களை மட்டுமல்ல... குடும்பங்களையும் நிர்மூலமாக்கிவிடுகிறது. உணர்ச்சி வேகத்தில் குற்றமிழைத்து ஒருமுறை சிறைசென்று வந்தவர்கள் சமூகத்தின் பார்வையில் வாழ்நாள் குற்றவாளிகளாகி விடுகிறார்கள். அப்படி ஒதுக்கப்படும் மனிதர்களின் மறுவாழ்வுக்காகவும் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவும் நடந்துகொண்டிருக்கிறார் ராஜா. பிறப்பிலேயே முடக்கிப்போட்ட போலியோ அவரது சேவைப் பயணத்துக்குத் தடையாக இல்லை. முதுகலை படித்தபோது களப்பணிக்காகச் சிறைக்குச் சென்றவரை சிறைவாசிகளின் கண்ணீர் கலங்க வைத்திருக்கிறது. அந்தத் தருணம்தான் அவரது நீண்ட பயணத்துக்கான தொடக்கப்புள்ளி. ராஜா நடத்தும் ‘குளோபல் நெட்வொர்க் ஃபார் ஈக்வாலிட்டி’ இன்று 500க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் குழந்தைகளின் கல்விக்கு உதவுகிறது. தன் உடல்நிலை கருதாது குமரிக்கும் சென்னைக்கும் அலைந்து சிறைவாசிகளின் குடும்பத்துக்கு நம்பிக்கையூட்டும் ராஜா, கிரிமினாலஜியும் சட்டமும் படித்தவர். இஸ்ரேலும் ஜெர்மனியும் ராஜாவை அழைத்து சிறைவாசி குழந்தைகளின் நல்வாழ்வுக்கென ஆலோசனை கேட்டது, அவர் சேவைக்கான அங்கீகாரம்!