தெள்ளிய நதிபோல ஓடிக்கொண்டிருந்த நந்தினியின் வாழ்க்கையைத் தேக்கி நிறுத்திச் சுழலில் தள்ளியது கணவரின் தற்கொலை. இழப்பின் துயர் ஒரு பக்கம்; உறவுகளின் வசவுகள் தந்த வலி ஒரு பக்கமென நிலைகுலைந்து நின்றவர், அதிலிருந்து விடுபட்டு தன்னைப்போல தற்கொலைக்கு உறவுகளைப் பலிகொடுத்தவர்களை ஆற்றுப்படுத்துவதையே பிற்பகுதி வாழ்க்கையென வடிவமைத்துக்கொண்டார். தற்கொலை செய்துகொள்வோரின் உறவுகள் இந்தச் சமூகத்தில் எதிர்கொள்ளும் துயரங்களை உள்ளடக்கி நந்தினி எழுதிய ‘லெஃப்ட் பிஹைண்டு - சர்வைவிங் சூசைடு லாஸ்’ புத்தகம், மன அழுத்தம் கொண்டோருக்கான உளவியல் மருந்து. தற்கொலைத் தடுப்புப் பிரசாரம், தற்கொலை செய்தோரின் குடும்பத்தாருக்கான மனநல ஆதரவு எனப் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறார் நந்தினி. அவர் தொடங்கியுள்ள ‘ஸ்பீக்’ அமைப்பு, பள்ளி, கல்லூரிகளில் தற்கொலையின் விளைவுகளைப் பேசிக்கொண்டிருக்கிறது. ஒரு நொடியில் முடிந்துபோகும் தற்கொலையின் இழப்பையும் குற்ற உணர்வையும் சுமப்பவர்களுக்காகக் களமாடுகிற நந்தினி கொண்டாடப்பட வேண்டிய சேவைக்காரர்!