போட்டித்தேர்வுப் பயிற்சி பெருவணிகமாகிப்போன காலம். பணமற்ற எளிய குடும்பத்துப் பிள்ளைகளுக்கு அரசுப்பணி நிகழாக் கனவாகவே முடிந்துவிடுகிறது. தூத்துக்குடி பேச்சிமுத்து, தன்பகுதி பிள்ளைகளின் கனவு அப்படித் தீர்ந்துபோய்விடக்கூடாது என்று எண்ணினார். தன் உப்பள வருமானத்தில் ஒரு தொகை ஒதுக்கி, கல்யாண மண்டபம் கட்ட வாங்கிப்போட்டிருந்த நிலத்தில் ஒரு போட்டித்தேர்வுப் பயிற்சி மையத்தைக் கட்டியெழுப்பினார். கடந்த 7 ஆண்டுகளாகப் பலநூறு பேருக்கு ஒற்றைப்பைசா கட்டணமில்லாமல் பயிற்சி அளித்துள்ள பேச்சிமுத்துவின் கின்ஸ் அகாடமி, 170 பேரை அரசுப்பணியில் அமர்த்தியிருக்கிறது. குளிரூட்டப்பட்ட வகுப்பறைகள், அனுபவமிக்க ஆசிரியர்களென பெருநகரத் தரத்தில் இயங்குகிறது பயிற்சி மையம். தினமும் மையத்துக்கு வந்து பயிற்சி பெறுவோருக்குச் சிற்றுண்டியும் சுக்குக்காபியும் தந்து தம் பிள்ளைகளைப்போல அன்பு பாராட்டுகிறார் பேச்சிமுத்துவின் மனைவி. எந்த எதிர்பார்ப்புமின்றி எளிய குடும்பங்களின் தலையெழுத்தை மாற்றிவரும் பேச்சிமுத்து தூத்துக்குடியின் ஞானத்தந்தை.