தன் முழு வாழ்வையும் சமூகத்துக்காக ஒப்புக்கொடுத்த இந்தப் பேராசிரியர், 30 ஆண்டுக்காலம் பல்லாயிரம் மாணவர்களுக்கு அறிவியலோடு சேர்த்து சமூகத்தையும் புகட்டியவர். புரட்சிப் பண்பாட்டு அமைப்புகளைத் தமிழகத்தில் கட்டியெழுப்பி அரசாங்கங்களை அதிரவைத்த இளவயது வேகமும் கோபமும், இன்று பழங்குடிகள்மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளுக்கு எதிராகவும் தகிக்கிறது. தான் பேராசிரியராகப் பணிபுரிந்த திண்டிவனத்துக்கு அரசுப் பெண்கள் பள்ளியைக் கொண்டுவருவதற்காகவே ஒரு அமைப்பைக் கட்டியெழுப்பிய கல்விமணி, கல்விநிறுவனங்களை எளிய மக்களிடமிருந்து அந்நியப்படுத்தும் நன்கொடை, தனிப்பயிற்சி அவலங்களுக்கு எதிராக மிகப்பெரும் இயக்கத்தை நடத்தியவர். ஊட்டி, தர்மபுரி, ராமநாதபுரம் எனப் பணிமாற்றிப் பந்தாடப்பட்டபோதெல்லாம் மக்களும் மாணவர்களும் அரணாக நின்று காத்தார்கள். விருப்ப ஓய்வு பெற்று, 25 ஆண்டுகளாக இருளர் பழங்குடிகள் மீதான வன்முறைக்கும் சமூகப்புறக்கணிப்புக்கும் எதிராகக் களமாடிவருகிறார். அத்தியூர் விஜயா தொடங்கி டி.கே.மண்டபம் லெட்சுமி வரை வஞ்சிக்கப்பட்ட பெண்களுக்காகக் கால்தேய நடந்து நீதிபெற்றுத்தந்த கல்விமணி, இதுவரை 900 வன்கொடுமை வழக்குகளைக் கையாண்டிருக்கிறார். மதிய உணவையும் உள்ளடக்கி தாய்த்தமிழ்ப் பள்ளி ஒன்றை வெற்றிகரமாக நடத்தும் கல்விமணி, கொரோனா இரண்டாம் அலை காலத்தில் ‘நுண்வகுப்பறை’ மூலம் கல்வியை மட்டுமன்றி உணவையும் மாணவர்களின் இல்லம் தேடிச்சென்று வழங்கி அரசுக்கு வழிகாட்டினார். தங்கள் துயர் நீக்கவந்த கல்விமணியை மதிப்புக்குரிய வழிகாட்டியாகப் பார்க்கிறார்கள் பழங்குடிகள். இந்த நொடியும் குரலற்ற எவரோ ஒருவருக்காகப் புகார்ப்படிவம் எழுதிக்கொண்டிருக்கும் கல்விமணியை, டாப்-10 மனிதர்களில் ஒருவராக கௌரவித்துப் பெருமிதம் கொள்கிறது ஆனந்தவிகடன்.