லால்குடித் தெருக்களில் கற்களுக்கும் முட்களுக்கும் நடுவே ஓடிப்பழகிய கால்கள், உலகம் கொண்டாடும் ஒலிம்பிக் அரங்கில் தடம் பதித்ததற்குப் பின்னால் இருக்கிறது, ஓரு குடும்பத்தின் பசியும் பட்டினியுமான போராட்டம். வறுமை பிடுங்கித் தின்னும் வாழ்க்கை; உடலை வருத்தும் மூச்சுத்திணறல் பாதிப்பு... வாழ்க்கை விரக்தியின் பக்கம் துரத்த, அதைக்கடந்து ராஜீவ் வெற்றிக்கோட்டை நோக்கியே ஓடிக்கொண்டிருந்தார். 2014-ல் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், 400 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலத்துக்கான போடியம் ஏறிய இவர், அடுத்த 4 ஆண்டுகளில் கலப்பு தொடர் ஓட்டத்தில் வென்று தங்கத்துக்காக ஏறினார். ஆசியப் போட்டிகளில் மூன்று பதக்கங்களை வென்று வந்த ராஜீவுக்கு அர்ஜுனா விருது தந்து கொண்டாடியது தேசம். ராஜீவ் போட்டுத்தந்த தடத்தில் இன்று பலநூறு பேர் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். தன் 18 வயதில் சிப்பாயாக இந்திய ராணுவத்தில் இணைந்தவர், இப்போது மெட்ராஸ் ரெஜிமென்ட்டில் சுபேதாராக இருக்கிறார்! உழைப்பும் இலக்கும் ஒற்றைப்புள்ளியில் இணைந்தால் வறுமையையும் நோயையும்கூட ஜெயிக்கலாம் என்ற வார்த்தைகளுக்கு உதாரணமாக இருக்கிற ஆரோக்கிய ராஜீவின் கதை, இளந்தலைமுறைக்கான பாடம்!