டீக்கடைதான் கிராமங்களின் கூடுதலம். டீக்கடையே உலகம்; டீயே உணவென்று கிடக்கிற மனிதர்கள் பலருண்டு கிராமங்களில். ஒருநாள் விடியலில் கஜா புயல் மொத்த வாழ்வாதாரத்தையும் நிர்மூலமாக்க, டீக்குக்கூட காசற்ற கையறுநிலைக்குப் போயின பல குடும்பங்கள். ஆலங்குடி வம்பன் நாற்சாலையில் டீக்கடை நடத்தும் சிவக்குமார், அந்த மக்களின் துயரில் தோள்கொடுத்தார். வீடுகளுக்குள் முடங்கிய தன் வாடிக்கையாளர்களுக்கு வீடுதேடிச் சென்று டீ கொடுத்ததோடு, தனக்குத் தரவேண்டிய கடன்பாக்கியைத் தரவேண்டாம் என்றார். அன்றாடம்காய்ச்சியான சிவக்குமார் அப்படி வேண்டாமென்று சொன்ன தொகை இருபத்தைந்தாயிரத்தைத் தாண்டும். தோட்டம் நிர்மூலமாகித் தவித்து நின்ற விவசாயிகளுக்குச் செம்மரம், சந்தன மரக்கன்றுகளை வரவழைத்து வழங்கினார். பேரிடர்க் காலங்களில் டீக்கடை முகப்பில் சுடச்சுட மூலிகைக் கஷாயங்கள் வைப்பது, முதியோருக்குப் பாலும் பிரெட்டும் வழங்குவது, பச்சிளம் குழந்தைகளுக்குப் பால் வழங்குவது என இவரது நேசக்கரம் நீண்டுகொண்டே போகிறது. தன் கடையில் மொய் விருந்து விழா நடத்தி அதன்மூலம் கிடைத்த 23,000 ரூபாயை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பிய இந்தப் பெருந்தன்மைக்காரர் ‘எனக்குச் சோறுபோட்ட மக்கள் தவிச்சு நிக்கும்போது பாத்துக்கிட்டு சும்மா இருக்கமுடியுமா?' என்று கேட்கும் கேள்வியில் தளும்ப நிரம்பியிருக்கிறது மனிதம்!