பொ.வேல்சாமி தமிழ் இலக்கிய வரலாறு குறித்த புதிய வெளிச்சங்களைப் பாய்ச்சிய அறிவு ஆளுமை. தமிழ் இலக்கிய வரலாறு, ஓலைச்சுவடிகள் அச்சு நூல்களாக வடிவம் பெற்ற தமிழ்ப் பதிப்பு வரலாறு, ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் தமிழின் வளர்ச்சிக்கு உழைத்த வெளிநாட்டவர்கள், தமிழர்களின் சடங்குகள், பண்பாடுகள் குறித்த ஏராளமான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இவர் எழுதிய `பொற்காலங்களும் இருண்டகாலங்களும்', `கோவில் நிலம் சாதி', `பொய்யும் வழுவும்', `வரலாறு என்னும் கற்பிதம்' நூல்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. களப்பிரர் காலம் இருண்டகாலம் என்று பல தமிழறிஞர்களால் குறிப்பிடப்பட்டபோது, அவை தவறான தகவல்கள் என்று ஆதாரபூர்வமாக நிறுவியவர். `19ஆம் நூற்றாண்டுவரை தஞ்சைப் பெரியகோயிலைக் கட்டியது காடுவெட்டிச்சோழன் என்று தமிழர்கள் நினைத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் அதைக் கட்டியது ராஜராஜ சோழன் என்ற உண்மையை வெளிக்கொணர்ந்தவரே ஹீல்ஸ் என்ற ஆங்கிலேய கல்வெட்டு அறிஞர்தான்' என்பது போன்ற பல ஆச்சர்யமூட்டும் தகவல்கள் இவர் ஆய்வின் அடித்தளங்கள். கால்டுவெல்லின் `திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' நூலின் விடுபட்ட பகுதியைத் தேடிப்பிடித்து அதை முழுமையான பதிப்பாகக் கொண்டுவரக் காரணமாக இருந்த பொ.வேல்சாமி, கால்டுவெல்லின் `பரதகண்ட புராதனம்' நூலை அச்சிட்டார். தனிச் சேகரிப்பிலிருந்த 3,000-க்கும் மேற்பட்ட புத்தகங்களைத் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் மின்னூலாக்கத் திட்டத்துக்குக் கொடையாக வழங்கியிருக்கிறார். கற்பிதங்களையும் பொய்யான நம்பிக்கைகளையும் தகர்க்கும் விதத்தில் தொடர்ச்சியாக சமூகவலைதளத்தில் எழுதிவருவதுடன், பழந்தமிழ் நூல்களின் மின்னூல், கல்வெட்டுகள் குறித்த இணையத்தொடர்புகளையும் கொடுப்பதுமூலம் வாசகர்களையும் ஆய்வாளர்களாக மாற்றும் முயற்சியில் முன்னிற்கிறார்.