அறிவரசு என்ற எம்.பி.ஏ படித்த இந்த அரக்கோண இளைஞர், இன்று தமிழ் சமூகத்தின் அதிர்வுக்குரலாய் உலகம் முழுவதும் ஒலித்துக்கொண்டிருக்கிறார். பெண்களை வர்ணிப்பதும் கேலி செய்வதுமாகத் திரிந்துபோயிருந்த தமிழ்ச் சொல்லிசையின் முகத்தை மாற்றி அதில் அரசியல் பேசியதில் தனித்துவம் பெறுகிறார் அறிவு. மேடை, இசைக்கருவியென எதையும் தேடாமல் தெருக்களிலும் பூங்காக்களிலும் நின்று இவர் இசைக்கும் கானங்கள் தேசத்தின் மனச்சாட்சியை உலுக்குகின்றன. `தெருக்குறள்', `எஞ்சாயி எஞ்சாமி' எனப் புதிய பாதையில் தமிழிசையை நகர்த்திச் செல்லும் அறிவின் குரலில் தெறிக்கும் தகிப்பும் தாகமும் இளம் தலைமுறைத் தமிழர்களை ஈர்க்கிறது. பா.இரஞ்சித்தின் கரம்பற்றி திரையிசைக்குள் நுழைந்தவர், ‘மாஸ்டர்' வாத்தி ரெய்டு, ‘ஜிப்ஸி' தீவிர வியாதி, ‘சார்பட்டா பரம்பரை' நீயே ஒளி, ‘ஜெய்பீம்' பவர் என அதிர்வேட்டுகளைக் கொளுத்திப்போட்டு கோலிவுட்டின் மோஸ்ட் வான்டட் பாடலாசிரியராகவும் பாடகராகவும் மாறியிருக்கிறார். பலநூறு குரல்கள் தோய்ந்த இசையுலகில் தனித்துவக் குரலாய் ஒலித்துக்கொண்டிருக்கிற அறிவு, சாதிக்க நினைக்கிற அத்தனை இளைஞர்களுக்கும் ஆற்றலின் நன்னம்பிக்கை முனை!