தஞ்சை, படிப்படியாகத் தன் பச்சையத்தை இழந்துவரும் தருணத்தில் நம்பிக்கை விதையாகத் துளிர்க்கிறது கைஃபா. ‘கடைமடைப் பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம்’ என்ற பெயரில் கரம் கோத்திருக்கும் நானூறுக்கும் மேற்பட்ட இளைஞர்கள், காவிரிப்படுகை மக்களுக்குத் தந்திருப்பது, எதிர்காலத்துக்கான நம்பிக்கை. கஜா புயலால் தவித்து நின்ற தம் உறவுகளுக்கு உதவ, பார்த்த வேலையை உதறிவிட்டு தங்கள் ஊருக்கு வந்த இளைஞர்கள் சமூக ஊடகங்களில் கரமிணைந்து நிவாரணங்களும் தென்னங்கன்றுகளும் தந்து தொண்ணூறுக்கும் மேற்பட்ட கிராமங்களை மீட்டெடுத்த தருணத்தில், உயிர்பெற்றது கைஃபா. கைஃபா நிகழ்த்திய முதல் பணியே பெருமாற்றத்துக்கான நகர்வு. 564 ஏக்கரிலான ஒரு குளத்தைத் தூர்வாரி நீர் நிரப்பியதில் குளிர்ந்துபோனது ஊர். கடும் எதிர்ப்புகள், அச்சுறுத்தல்களைக் கடந்து காவிரிக் கடைமடையில் அடுத்தடுத்து 25 நீர்நிலைகளை மீட்டுருவாக்கம் செய்தது இந்த இளைஞர் படை. இவர்களின் அர்ப்பணிப்பில் நெகிழ்ந்து ஒரு ஜேசிபி எந்திரத்தைச் சொந்தமாகவே வாங்கித்தந்தது தனியார் நிறுவனம் ஒன்று. அதேவேகத்தில் காவிரிப்படுகை கடந்து சிவகங்கை, தூத்துக்குடி வரைக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட நீர்நிலைகளை மீட்டு மேம்படுத்தியிருக்கிறது கைஃபா. தூர்வாரும் மண்ணால் கரையைப் பலப்படுத்துவது, நீர்நிலைக்கு நடுவில் குறுங்காடு அமைப்பதெனத் தொழில்நுட்பங்களோடு களத்தில் இறங்கியிருக்கும் கைஃபா, கால்வைத்த இடமெல்லாம் நீரூறுகிறது.