ஏசி எந்திரத்தில் கசிந்த சிறுபொறி, நெருப்பாக சென்னை கஸ்தூரிபா மருத்துமனையைச் சூழ்ந்தது. 3 செவிலியர்கள், 58 குழந்தைகள், 11 தாய்மார்கள் இருந்த பச்சிளங்குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவு தகித்தெரியத் தொடங்கியது. எல்லோரும் பதறிக்கொண்டு வெளியில் ஓட, செவிலியர் ஜெயக்குமார் ஜன்னலை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்து தீயோடு போராடினார். சுவாசத்தில் நுழைந்த புகை உடலில் இருந்த ஆஸ்துமாவைத் தூண்ட, அரைமணி நேரம் விடாப்பிடியாய்ப் போராடி, கடைசித்துளி நெருப்பு வரை அணைத்து முடித்துவிட்டு மயங்கி விழுந்தார் ஜெயக்குமார். ஐந்து நாள்கள் ஐசியூவில் இருந்து உயிர் மீண்ட இந்த மீட்பனைத் தன் இல்லம் அழைத்துக் கைகூப்பி வணங்கினார் தமிழக முதல்வர். கனன்றெரிந்த தீ, ஆக்சிஜன் செல்லும் காப்பர் குழாய்களைத் தொட்டிருந்தால் கும்பகோணத்தைவிடக் கொடூர விபத்தொன்று தமிழக வரலாற்றில் எழுதப்பட்டிருக்கும். குடியாத்தத்தில் ஒரு ஏழை நெசவாளியின் மகனாகப் பிறந்த ஜெயக்குமார், தட்டுத்தடுமாறி செவிலியர் படிப்பை எட்டிப்பிடித்தவர். கைவிளக்கேந்திய இந்தக் கருணைமிகு உயிர்மீட்பனைக் கரம்பற்றிப் போற்றுகிறது ஆனந்த விகடன்.