சிறுவயதில் பெற்றோரை இழந்த மீனாவை வாழ்க்கை சுழற்றிச் சுழற்றியடித்தது. 15 வயதில் தொடங்கிய திருமண வாழ்க்கை, 18 வயதில் முடிவுக்கு வர, உறவுகளும் விரல் உதறிக்கொண்டன. எதிர்காலம் புரியாமல் நின்ற மீனா, துயரைத் துடைத்தெறிந்துவிட்டு ஐ.டி வேலை, சுயதொழில் என மெல்ல மெல்ல மேலெழுந்தார். தனக்கேற்பட்ட துயரும் வலியும் பிறருக்கு நேராக்கூடாதென்ற எண்ணம், அவரை சேவையின் பக்கம் திருப்பியது. உறவற்ற சடலங்களை முறையாக அடக்கம்செய்து பல முகமறியா மனிதர்களுக்கு மகளானார். கொரோனா தாக்கத் தொடங்கிய தருணத்தில், சென்னைக் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தன்னார்வலராகத் தன்னை இணைத்துக்கொண்ட மீனா, தொற்றுக்குள்ளாகிப் பதற்றத்தோடு வருபவர்களை ஆற்றுப்படுத்தி அவர்கள் குணமாகிச் செல்லும்வரை ஆறுதலும் ஆதரவுமாக இருந்தார். தொற்று அவரையும் ஐ.சி.யூ-வுக்குள் தள்ள, ஆபத்தான கட்டம் கடந்து மீண்டார். இரண்டாம் அலைத் தாக்கத்தால் மரணங்கள் அதிகமாகி, அடக்கம் செய்யும்பணி முடங்கிய நேரத்திலும் அச்சமில்லாமல் அதிலும் தன்னை இணைத்துக்கொண்டார். அடுத்த நொடிக்கான எந்தப் பிடிப்பும் இல்லாமல் திசையற்று நின்ற மீனா, இன்று பல குடும்பங்கள் கொண்டாடும் சகோதரியும் மகளுமாகியிருக்கிறார். மீனாவின் வெள்ளந்திப் புன்னகைக்குள் இருக்கிறது, வாழ்தலுக்கான நம்பிக்கை!