காலங்காலமாக குற்றங்களின் தலைநகராகத் தமிழ் சினிமா அடையாளப்படுத்தும் வடசென்னையின் நவீன முகங்கள், வியாசைத் தோழர்கள். புறக்கணிப்பையும் அவமதிப்புகளையும் கடந்து கல்லூரியைத் தொட்ட இந்த முதல் தலைமுறை எடுக்கும் அத்தனை முன்னெடுப்புகளும் அடுத்த தலைமுறைக்கானவை. பெரும் நூலகத்தையும் உள்ளடக்கி இவர்கள் நடத்தும் அம்பேத்கர் பகுத்தறிவுப் பாடசாலை, எளிய குடும்பத்துப் பிள்ளைகளுக்குக் கல்வியோடு சேர்த்து விடுதலைக்கான அரசியலையும் போதிக்கிறது. கொரோனாவால் தேசம் நிலைகுலைந்து நின்ற நேரத்தில், தோழர்கள் தங்கள் பள்ளியை உதவி முகாமாக மாற்றிச் சுழலத் தொடங்கினார்கள். சமூக ஊடகம் வழியே உதவிகள் குவிய, நான்காயிரத்துக்கும் மேற்பட்ட எளிய மக்களுக்கு உதவிகளைக் கொண்டு சேர்த்தார்கள். இரண்டாம் அலை சுழற்றியடித்த நேரத்தில் ஆட்டோக்களில் ஆக்சிஜன் பொருத்தி 200க்கும் மேற்பட்ட நோயாளிகளின் உயிர் மீட்டார்கள். வியாசர்பாடி பிளாட்பாரத்தில் டெண்ட் கட்டி கொரோனாவுக்காக இவர்கள் உருவாக்கிய அவசரகால வார் ரூம், ஆறு மாத காலம் இரவு பகலாக இயங்கியது. தொற்றுக்குள்ளாகி இறந்தோர் உடலை அடக்கம் செய்யவெனத் தனிக்குழுவையும் களமிறக்கி, தவித்தோருக்குத் தோள் கொடுத்தார்கள். வியாசர்பாடி என்றாலே புறக்கணிப்பின் முறைப்புடன் எதிர்கொண்ட காவல்துறையை மரியாதையோடு புன்னகைக்க வைத்ததில் இருக்கிறது, வியாசைத் தோழர்களின் வெற்றி.