மாசற்று வாழ்வதற்காகப் போராடியவர்கள்மீது துப்பாக்கிக்குண்டுகளைப் பாய்ச்சிய அரச வன்முறையை அம்பலப்படுத்தி, நீதியை உயிர்ப்பித்தவர். ஒரு அபாயத் தொழிற்சாலைக்கு எதிராக, தங்கள் தலைமுறையைக் காக்கும் நோக்கில் போராடிய மக்களைக் குறிவைத்துக் குதறியது காவல்துறை. குரலெழுப்பிய குற்றத்துக்காகவே ஒரு தங்கை வாயில் சுடப்பட்டது, உச்ச கொடூரம். எந்தத் தயக்கமுமின்றி வாகனத்தின் மீதேறித் துப்பாக்கி விசையிழுத்த ஒரு காவலரின் வெறித்தாண்டவத்தை உலகமே பார்த்து அதிர்ந்தது. நீதி வழங்கவேண்டிய முதல்வர், தனக்கு எதுவுமே தெரியாது என்று கைவிரித்தார். உயிருக்கு உயிரான உறவுகளைப் பலிகொடுத்தவர்களும், வன்முறையில் சிக்கி வாழ்நாள் முடமானவர்களும் மனதுக்குள் புழுங்கிக்கிடந்த கணத்தில்தான் களத்துக்கு வந்தார் அருணா ஜெகதீசன். ஆட்சியர் தொடங்கி, காவலர்கள் வரை அதிகாரிகளின் அகங்காரத்தையும் அலட்சியத்தையும், திட்டமிடல் முரண்களையும் வெளிப்படையாகச் சுட்டிக்காட்டி அவர்களைச் சட்டத்தின்முன் நிறுத்தவேண்டிய அவசியத்தையும் முன்வைத்தது, அருணா ஜெகதீசன் ஆணையம் தந்த அறிக்கை. சார்பு நீதிபதியாகத் தொடங்கி பல உயரிய பொறுப்புகளில் அமர்ந்து, எளிய மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்த நீதியரசிக்கு வந்தனங்கள்!