தஞ்சைக் கீழவீதியில் மருத்துவ ஆலோசனை மையம் நடத்துகிற இந்த ஓய்வுபெற்ற மருத்துவப் பேராசிரியருக்குத் தீராக்கனவு, தமிழ்வழி மருத்துவப் படிப்பு. அக்கனவை நனவாக்க வாழ்வின் ஐம்பதாண்டுகளை அர்ப்பணித்திருக்கிறார். தமிழ்வழி உயர்கல்விக்குத் தடையே துறைநூல்கள் இல்லாததும் கலைச்சொற்கள் தொகுக்கப்படாததும்தான். அதையுணர்ந்து, தன் துறைப் பாடநூல்களைத் தமிழில் எழுதியதோடு, உயர்கல்வி நிறுவனங்களோடு இணைந்து பல மருத்துவக் களஞ்சியங்களையும் உருவாக்கியிருக்கிறார் நரேந்திரன். நவீன மருத்துவத்தின் அடிப்படைகளை எளிய மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் நரேந்திரன் உருவாக்கியிருக்கும் 30 நூல்கள், தமிழுக்கு அவரளித்த நற்கொடை. வரலாற்றுப் புரிதலோடும் கல்விப்புலத் தெளிவோடும் அயராது இயங்கும் இந்த 79 வயது தமிழ்த்தாத்தா, இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவக் கலைச்சொற்களைத் தொகுத்தளித்திருக்கிறார். விரைவில் தமிழ்வழி மருத்துவப் படிப்பு மலரவிருக்கிற இந்நேரத்தில் அரசுக்கு ஆலோசகராக இருந்து வழிகாட்டும் இந்த நம்பிக்கை நாயகரை உச்சிமுகர்கிறாள் தமிழன்னை.