கடலோடிகளுக்காக ஒலிக்கும் காத்திரமான குரல் வறீதையா கான்ஸ்தந்தின். கடலோடிகள் சமூகத்தின் வாழ்வியல் பிரச்னைகளை, எதிர்காலக் கனவுகளை, அரசியல் அதிகாரத்தில் அச்சமூகம் கொண்டிருக்கும் இடைவெளியை அக்கறையோடும் ஆதங்கத்தோடும் அறிவியல் மற்றும் வரலாற்றுரீதியாகப் பதிவுசெய்துவரும் ஓய்வறியா களப்போராளி. பேராசிரியர், எழுத்தாளர், பதிப்பாளர், சூழலியல் செயற்பாட்டாளர், பேச்சாளர் எனப் பன்முகம் கொண்டவர். ‘கரைக்கு வராத மீனவத் துயரம்’, ‘கோடிமுனை முதல் ஐ.நா.சபை வரை’, ‘கடற்கோள் காலம்’, ‘பழவேற்காடு முதல் நீரோடி வரை’ உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நெய்தல் நிலம் சார்ந்த நூல்களை எழுதியவர். கடல், கடல்வளம், கடற்கரைப் பாதுகாப்பு, கடல்சார் மக்கள் பண்பாடு, கடல்சார் மரபறிவு, அரசியல், பொருளாதாரம், உரிமைகள், கல்வி, தொழில் வாய்ப்புகள், பேரிடர்க்காலச் சிக்கல்கள், தீர்வுகள் குறித்து ஆய்விலும் எழுத்திலும் தொடர்ந்து கால் நூற்றாண்டுக்கும் மேலாகத் தீவிரமாய் இயங்கிவருகிறார். கடல்வளச் சுரண்டலுக்கு எதிராக அயராது எதிர்க்குரல் எழுப்பிவருபவர். தமிழகக் கடற்கரையின், கரைசார் மக்களின் வாழ்வியலில் அறியப்படாத முகத்தை உலகுக்கு அறிமுகப்படுத்துவதோடு, அம்மக்களின் விடியலுக்காக எழுத்தாயுதம் ஏந்தும் பேராசிரியர் வறீதையா கான்ஸ்தந்தின், மக்கள் நம்பிக்கையில் ருசியேற்றும் உப்பு!