மொழி வழியேதான் இனத்தின் வரலாறும் பண்பாடும் துளிர்க்கும். லட்சுமணன் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பழங்குடிகளோடு வாழ்ந்து, அவர்களின் வாழ்க்கைச்சூழலை உயர்த்தி, மொழியையும் வரலாற்றையும் ஆவணப்படுத்துகிறார். வாய்மொழியாக இருக்கும் இலக்கியங்களைப் பதிவு செய்வதோடு அவர்கள் உரிமைக்காகவும் போராடுகிறார். தன்மேல் எந்த வெளிச்சமும் படாமல் இயங்கும் லட்சுமணன், பழங்குடியினர் நலனுக்காக இருளர் மொழியையும் கற்றுத் தேர்ந்திருக்கிறார். அவர் எழுதிய ‘ஒடியன்’, ‘சப்பெ கொகாலு’ நூல்கள் மொழியியல் வரலாற்றில் அதிமுக்கியப் பதிவுகள். இருளர் சமூக இளைஞர்களுக்குப் பயிற்சியளித்து, நாடகக் கலைஞர்களாக வார்த்தெடுக்கிறார். பழங்குடி மொழிகளின் அகராதி, பழங்குடிக் குழந்தைகளுக்கான வாசிப்பு இயக்கம் என அவர்களின் இருள் வாழ்க்கையில் படரும் அறிவொளியாக வியாபிக்கும் இந்த அற்புத மனிதனைக் கொண்டாடிப் பெருமிதப்படுகிறது ஆனந்த விகடன்.