• Title sponsor

டாப் 10 மனிதர்கள்

  • நீதி வென்ற போராளிகள் - வாச்சாத்தி பெண்கள்

1992-ம் ஆண்டு ஜூன் 20-ம் தேதி சுதந்திர இந்தியாவின் ஆகப்பெரிய அரச வன்முறையை எதிர்கொண்டது வாச்சாத்தி கிராமம். இந்த மலைக்கிராமத்தின் பழங்குடி மக்களை போலீஸ், வனத்துறை, வருவாய்த் துறை என 300-க்கும் மேற்பட்ட மனித மிருகங்கள் சூழ்ந்து சூறையாடின. கிராமத்தையே சிதைத்து, 18 பெண்களைத் தனிமைப்படுத்தி வல்லுறவுக்குள்ளாக்கின. 15 பெண்கள் திருமணமாகாதவர்கள். அதிலும் ஒருவர் சிறுமி. இவ்வளவு அட்டூழியங்களைச் செய்துவிட்டு, வழக்குகளையும் போட்டு, குரலற்ற அம்மக்களைச் சிறையில் அடைத்தார்கள். மக்களின் அரணாக நிற்கவேண்டிய அரசு துரதிர்ஷ்டவசமாக, ‘இப்படியொரு சம்பவமே நடக்கவில்லை’ என சட்டமன்றத்திலும் நீதிமன்றத்திலும் சொல்லி சகாக்களைப் பாதுகாத்தது. மூன்றாண்டுகள் போராடியும் முதல் தகவல் அறிக்கைகூடப் போடாமல் அலைக்கழித்தது காவல்துறை.

‘படித்த அதிகாரிகள் தவறிழைக்க மாட்டார்கள்' என்று வழக்கை எடுக்க மறுத்தது நீதிமன்றம். அத்தனை அரசு அமைப்புகளும் ஓரணியாகத் திரண்டு நிற்க, மனம் தளராமல் நீதிக்காகப் போராடினார்கள் எளிய மக்கள். கோடிக்கணக்கில் பணம், அரசுப்பணி என ஆசைகாட்டியும் அச்சுறுத்தியும் இவர்களை வளைக்க முயன்றது அரசு. எதற்கும் பணியாமல் மலைவாழ் மக்கள் சங்கத்தின் உதவியோடு உச்சபட்சமாக உச்ச நீதிமன்றத்தின் கதவையும் தட்டினார்கள். வழக்கு சி.பி.ஐ வசம் வந்தபிறகு, நீதிக்கான வெளிச்சம் சற்றே தெரிந்தது. நீண்ட காத்திருத்தலில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றம் உறுதி செய்யப்பட்டது. அதற்குள் குற்றமிழைத்தவர்களில் 54 பேர் இறந்துபோயிருந்தார்கள். மீதமிருப்பவர்கள் மேல்முறையீடு என சட்டத்தின் சந்துபொந்துகளுக்குள் நுழைந்து தப்ப நினைத்தார்கள். மீண்டும் 12 ஆண்டுக்காலக் காத்திருப்புக்குப் பிறகு உயர் நீதிமன்றம் சமீபத்தில் குற்றவாளிகளின் தண்டனையை உறுதிசெய்திருக்கிறது. அரசு எந்திரத்தின் அடக்குமுறைக்கு எதிராக 31 ஆண்டுகள் தளராமல் போராடி நீதி வென்ற இந்த வாச்சாத்தியின் போராளிப் பெண்களை கரங்குவித்து வணங்கிப் போற்றுகிறது ஆனந்த விகடன்.

`The Imperfect Show 2021 ரிவைண்ட் குவிஸ் போட்டியில்'பங்கு கொண்டதற்கு நன்றி. மீண்டும் கலந்துகொள்ள Click Here