• Title sponsor

பெருந்தமிழர் விருது

  • பேராசிரியர் சாலமன் பாப்பையா

‘அன்புத் தாய்மார்களே... அருமைப் பெரியோர்களே... இனிய குழந்தைகளே...’ என்றொலிக்கும் அந்த கணீர்க்குரல் உலகத் தமிழர்களை வசியப்படுத்தியது. புராணங்களையும் இலக்கியங்களையும் பேசிக்கொண்டிருந்த பட்டிமன்றங்களை எளிய மக்களின் வாழ்க்கைப்பாடுகளைப் பேச வைத்தார். இறுக்கமாக இருந்த இயற்றமிழ் மேடைகளை எளிமையாக்கியது, மெல்லிய புன்னகையும் தெள்ளிய சிந்தனையுமாக இருக்கிற இந்தப் பேராசிரியரின் அரை நூற்றாண்டுக்கும் மேலான வாழ்க்கை. சமூகத்தின் சகல விஷயங்களையும் மேடையில் வைத்து அடித்துத் துவைத்தார். படித்தவனுக்கு மட்டுமே புரிந்த தமிழ், பாமரனுக்கும் புரிந்தது. சிரிக்கவிட்டு சிந்திக்கவும் வைத்தது அந்தப் பேச்சு.

இன்றைக்கும் தமிழ் மக்களின் பண்டிகைக்காலங்களை இரட்டிப்பு இனிப்பாக்குவது தொலைக்காட்சி வழி ஒலிக்கும் இவரின் வெள்ளந்திக் குரல்தான். கம்பனை இவரளவுக்கு எழுதியும் பேசியும் எளிமைப்படுத்தித் தந்தது வேறு எவருமில்லை. அகநானூற்றிலும் புறநானூற்றிலும் ஆழங்கால்பட்ட இவர், திருக்குறளுக்கு எழுதியது இன்றைக்கும் எல்லோராலும் விரும்பப்படுகிற எளிய உரை. இந்தத் தமிழாசான் போட்டுத்தந்த ராஜபாட்டையில் இன்று நம்பிக்கையோடு பயணிக்கிறார்கள் அனேக இளைஞர்கள். இதுவரை 6,000 மேடைகளுக்கு மேல் முழங்கியிருக்கும் சாலமன் பாப்பையாவின் மொத்தப் பேச்சும் முன்னிறுத்துவது, மக்களுக்கான அறம். இவர் தமிழறிவின் அடையாளம். நமக்கான பெருமிதப் பெருந்தமிழர் இவர்.

`The Imperfect Show 2021 ரிவைண்ட் குவிஸ் போட்டியில்'பங்கு கொண்டதற்கு நன்றி. மீண்டும் கலந்துகொள்ள Click Here