காவிரிக் கரையிலிருந்து புறப்பட்டு வந்து தொழில்முனைவோரான ஐந்து முதல் தலைமுறைப் பட்டதாரிகளால் உருவானது இந்த இயக்கம். கடந்த 14 ஆண்டுகளில், பல நல்மனக்காரர்களின் பங்களிப்போடு 1,159 மாணவர்களின் வாழ்க்கையை மாற்றியமைத்து ஒளி தந்திருக்கிறது. நல்ல மதிப்பெண் எடுத்தும் கல்லூரிக்குள் கால்வைக்க முடியாமல் தவிக்கும் எளிய குடும்பத்துப் பிள்ளைகளுக்கு உயர்கல்வி தந்து, அவர்களுக்கு வேலை பெற்றுத் தரும் வரைக்கும் உற்ற உறவாக இருந்து வழிநடத்துகிறது. இந்தத் தன்னலமற்ற சேவைக்காகவே இவர்களுக்கு அள்ளிக் கொடுக்கலாம் ஆயிரம் பூங்கொத்துகள்! 47 மருத்துவர்கள், 444 பொறியாளர்கள், 511 கலை அறிவியல் பட்டதாரிகள், 16 அரசு ஊழியர்கள் என ‘ஆனந்தம்’ தந்த வெளிச்சத்தில் அடுத்தடுத்த தலைமுறைகள் ஒளிர்கின்றன. கல்வியோடு சேர்த்து, தொழில்சார் பயிற்சிகள், முன்மாதிரி மனிதர்களுடனான அனுபவப் பகிர்வுகள், தனித்திறனை ஊக்குவிக்கும் பட்டறைகளென பார்த்துப் பார்த்துப் பட்டை தீட்டி ஜொலிக்க வைக்கிறார்கள். தஞ்சை கூலித்தொழிலாளியின் மகள் சுமித்ராவும் அரியலூரின் எளிய குடும்பத்துப் பிள்ளை ராதேஷும் ஆண்டுச் சம்பளமாக ரூ. 50 லட்சத்தை எட்டிப் பிடித்த அதிசயமும் இவர்களால் நடந்திருக்கிறது. தனக்குக் கிடைத்ததைப் பிறருக்கும் தரவேண்டுமென்கிற நல்லெண்ணத்தில் உதித்த இந்த இயக்கம், சத்தமில்லாமல் நிகழ்த்தியிருப்பது மகத்தான மாற்றம். அதற்காகவே இந்த அக்கறை இதயங்களை நம்பிக்கை மனிதர்களாகத் தேர்வு செய்து கொண்டாடுகிறது ஆனந்த விகடன்.