தமிழ் சினிமா முகம் மாறியிருக்கிறது. வித்தியாசக் கதைக்களங்கள், அபூர்வ கதாபாத்திரங்களைத் தேடத் தொடங்கிவிட்டார்கள் ரசிகர்கள். அவர்கள் விரும்பும் இளைஞனாகக் கிடைத்திருக்கிறார் துருவ் விக்ரம். அப்பாவின் அணைப்பை விட்டு தன்னந்தனியாக வேட்டையாடப் புறப்பட்டதே அடுத்த கட்டத்தின் அறிகுறிதான். வில்லேஜ் சப்ஜெக்ட்டில் உழைப்பைக் கொட்டி, ஆற்றாமை, கோபம், வெறித்தனம் என உணர்வுகளைக் கலந்து கட்டி ஆடிய துருவ், ‘பைசன் காளமாடனி'ல் எடுத்தது பெரும் பாய்ச்சல். திரையுலகில் தொடக்கத் தடுமாற்றங்களைக் கடந்து அவர் காட்டிய நிதானத்தின் வெளிப்பாடே, இன்று நம்பிக்கை நட்சத்திரமாக ரசிகர்களின் இதயத்தில் அவரை அமர்த்தியிருக்கிறது. உடலைக் குறைத்து, உருமாற்றி படத்தில் அவர் வாழ்ந்ததெல்லாம் பேரழகு. ‘பைசனி'ல் அப்பா மீதான மரியாதை, அக்கா மீதான பேரன்பு என அவர் வெளிப்படுத்தியதெல்லாம் உணர்வுகளின் வானவில். தணியாத தாகம், குறையாத வேகம் எனத் தனக்கான சினிமாவைத் தேடிப் புறப்பட்டுவிட்டது இந்தப் பறவை. அடுத்தடுத்த களங்களில் சாதிக்க அவருக்கு பெரும் சவாலும் அதனால் நமக்கு நல்ல படைப்புகளும் காத்திருக்கின்றன. இந்த இளம் கலைஞனை நம்பிக்கை இளைஞராகத் தேர்வு செய்து கொண்டாடுகிறது ஆனந்த விகடன்.